கோவை:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை மண்டலத்தில் 'டாஸ்மாக்' கடைகளில், 60 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற மிக முக்கிய பண்டிகைகளுக்கு, டாஸ்மாக்கில் மதுபான விற்பனை அதிகரிக்கும்.ஒரே நாளில் 200 கோடி ரூபாய், 300 கோடி ரூபாய் வருமானம் என்று தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அப்படித்தான் இந்த முறையும் பொங்கல் விழாவை முன்னிட்டு எதிர்பார்ப்புகள் எழுந்தன.
பொங்கல் பண்டிகை என்பதால், 4 நாட்கள் அரசு விடுமுறை அளித்துள்ளது. அதேபோல, மாட்டுப் பொங்கல் தினமான நேற்று, வழக்கத்துக்கு அதிகமாகவே மது விற்பனையாவது இயல்பான விஷயமாகும்.ஆனால், கரிநாள் என, அழைக்கப்படும் உழவர் திருநாளன்றும் அரசு ஊரடங்கு அறிவித்து விட்டது.
இப்படி, 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை என்ற அறிவிப்பு, குடிமகன்களை 'அப்செட்' ஆக்கி விட்டது.மதுபானங்களை பாட்டில், பாட்டிலாக வாங்கி ஞாயிற்றுக்கிழமைக்காக ஸ்டாக் வைக்க துவங்கினர். பைக், கார்களில் வந்து மொத்தமாக வாங்கியவர்களும் உண்டு. நேற்று முன்தினம் இரவு, 10 மணியுடன் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன.இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் மாநிலம் முழுவதும், 317 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.
கோவை மண்டலத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில், 59.65 கோடி ரூபாய்க்கு, மது விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.திருவள்ளூர் தினமான நேற்று, மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வரும், 18ம் தேதி வடலூர் வள்ளலார் நினைவு நாள் என்பதால், அன்றைய தினமும் மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, குடிகாரர்கள் மொத்தமாக வாங்கி ஸ்டாக் வைத்து விட்டதையே இந்த விற்பனை காட்டுகிறது.