புதுடில்லி:மக்களின் குறைகளை கேட்கவும், தேங்கிய கோப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வாரத்தில் மூன்று மணி நேரம் ஒதுக்க மத்திய அமைச்சகங்கள் முடிவு செய்துள்ளன.
'சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்கள் இது தொடர்பாக மாதம் ஒரு முறை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண் டும்' என்றும், மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைகேட்பு துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் சார்பில் கடந்த அக்., 2 முதல் 31ம் தேதி வரை துாய்மை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஒரு மாதத்தில் அலுவலகங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்த தேவையற்ற பொருட்கள் விற்கப்பட்டதில் 62.54 கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைத்தது.தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டதில் 20 கால்பந்து மைதானங்களுக்கு சமமாக, 12.01 லட்சம் சதுர அடி இடமும் கிடைத்தது. அலுவலகங்களும் சுத்தமாக காட்சி அளிக்கின்றன. இந்த நடவடிக்கையை ஆண்டுதோறும் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேங்கிய கோப்புகள்
இந்நிலையில் டி.ஏ.ஆர்.பி.ஜி., எனப்படும் மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் மக்கள் குறைகேட்புத்துறை சார்பில் மத்திய அமைச்சகங்கள், துறைகளுக்கு சமீபத்தில் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் நடவடிக்கை எடுக்கப் படாமல் கோப்புகள் அதிகளவில் தேங்கி கிடக்கின்றன. அதேபோல் மக்களின் குறைகேட்பு நிகழ்ச்சிகளும் முறையாக நடத்தப்படுவதில்லை.
அதனால் அனைத்து அமைச்சகங்களும், துறைகளும் வாரத்துக்கு குறைந்தது மூன்று மணி நேரமாவது கட்டாயம் இதற்காக ஒதுக்க வேண்டும்.அப்போது மக்களின் குறைகேட்டல், தேங்கிய கோப்புகள் மீது நடவடிக்கை எடுத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து துறைகளின் செயலர்களும் மாதம் ஒரு முறை இந்த பணியில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து கடந்த 4ம் தேதி மத்திய அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா அனைத்துத் துறை செயலர்களுக்கும் எழுதிய கடிதத்தில், 'டி.ஏ.ஆர்.பி.ஜி.,யின் ஆலோசனையை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மத்திய அமைச்சகங்கள் வாரத்துக்கு மூன்று மணி நேரம் ஒதுக்கி கோப்புகள் தேங்க விடாமல் தடுக்கவும், மக்களின் குறைகளை கேட்கவும் முடிவு செய்துள்ளன. அடுத்த மாதம் முதல் இந்த நடவடிக்கை துவக்கப்படும்.நியமனம்இதற்காக ஒவ்வொரு துறையிலும் தனி அதிகாரியை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக இரண்டு மாதங்களுக்கு வாரத்துக்கு மூன்று மணி நேரம் ஒதுக்கப்படும்.இதன் வெற்றியை பொறுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.மத்திய அமைச்சகங்கள், துறைகளில் துாய்மை பணியையும் அடிக்கடி மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE