வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது. கடந்த முறை அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்த பா.ஜ.,வுக்கு, இம்முறை கடும் சவால்கள் காத்திருக்கின்றன. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் விலகலால் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கும் உ.பி.,யில், ஏழு கட்டமாக தேர்தல் நடக்கிறது.நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உ.பி.,யின் சட்டசபை தேர்தல் முடிவு தேசிய அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்
படுத்தும். அதனால் அந்த மாநில தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.

குற்றச்சாட்டு
இங்கு 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு சாதகமான அலை வீசியது என்பதை விட, ஆட்சியில் இருந்த அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி அரசுக்கு எதிரான
அலை வீசியது என்றே கூற வேண்டும். பிரதமர் மோடி மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை, அமித் ஷாவின் சாமர்த்தியமான வியூகம் உள்ளிட்டவற்றால், 2017ல் நடந்த தேர்தல் பா.ஜ.,வுக்கு பஞ்சு மெத்தையில் நடப்பது போல் அமைந்தது.ஆனால் இம்முறை பா.ஜ.,வுக்கு சட்டசபை தேர்தல் அப்படி எளிதான களமாக இருக்க வாய்ப்பில்லை. யோகி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் 12க்கும் அதிகமான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன.
கொரோனா பரவலை சரியாக எதிர்கொள்ளாதது, தொற்று பரவல் காலத்தில் கங்கை ஆற்றில் பிணங்கள் மிதந்தது, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சந்தித்த பிரச்னைகள், விவசாயிகள் பிரச்னை என எதிர்க்கட்சிகள் அடுக்குகின்றன.இதற்கு மாறாக பா.ஜ., தரப்பில் மாநிலத்தின் வளர்ச்சி, அயோத்தி ராமர் கோவில், வாரணாசி யில் ஏற்பட்டுள்ள மாற்றம், பெரிய அளவில் கலவரம் நடக்காதது போன்ற சாதனைகள் கூறப்படுகின்றன. ஆனால் மற்ற மாநிலங்களை விட உ.பி.,யில் ஜாதி ரீதியான ஓட்டுகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆதித்யநாத் அரசுக்கு எதிராக இதர பிற்படுத்தப்பட்டோரை ஒன்று சேர்க்கும் முயற்சி யில் சமாஜ்வாதி கட்சி ஈடுபட்டுள்ளது.இந்த முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக ஆதித்யநாத் அமைச்சரவையிலிருந்து இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகளைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள், ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் சமாஜ்வாதியில் இணைந்து உள்ளனர்.
50 சதவீதம்
யாதவர்களின் கட்சி எனக் கூறப்படும் சமாஜ்வாதிக்கு இவர்களது வருகையால் பலம் கிடைத்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோரிடம் தன் செல்வாக்கை அதிகரிக்க இது உதவும் என, அகிலேஷ் நம்புகிறார்.யாதவர்கள், முஸ்லிம்கள் ஓட்டுகளை நம்பி எப்போதும் களமிறங்கும் சமாஜ்வாதி, இம்முறை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்தோரின் ஓட்டுகளும் கிடைக்கும் என நம்புகிறது.
மாநிலத்தில் மொத்த வாக்காளர்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் 50 சதவீதத்துக்கு மேல் உள்ளனர். இவர்களில் யாதவர்கள் 9 சதவீதத்துக்கு மேல் உள்ளனர்.
அதனால் யாதவர் அல்லாதவர்களின் 35 சதவீத ஓட்டுகளை பெற அனைத்து கட்சிகளும் குறிவைக்கின்றன. விவசாயிகள் தரப்பில் செல்வாக்கு மிக்க ராஷ்ட்ரீய லோக் தளத்துடன் கூட்டணி அமைத்துள்ள சமாஜ்வாதி, இதர பிற்படுத்தப்பட்டோரில் உள்ள ஜாதிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் முயற்சித்து வருகிறது. இந்த வியூகம் தேர்தலில் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என அக்கட்சி நம்புகிறது. வரும் நாட்களில் ஆதித்யநாத் அரசிலிருந்து மேலும் சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் விலகுவர் என சமாஜ்வாதி கட்சி எதிர்பார்க்கிறது.
ஆதரவு
பா.ஜ., இதை மறுக்கிறது. 2014 லோக்சபா தேர்தல், 2017 சட்டசபை தேர்தல், 2019 லோக்சபா தேர்தல் ஆகியவற்றில் பா.ஜ., வெற்றி பெற்றதற்கு இதர பிறப்படுத்தப்பட்ட பிரிவினர் அளித்த ஆதரவு தான் காரணம் என்பதை மறுக்க முடியாது. இதை பா.ஜ.,வும் உணர்ந்துள்ளது. 100க்கும் அதிகமான பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்தவர்கள். கட்சியின் மாநில நிர்வாகிகளில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளை சேர்ந்தவர்கள்; 16 சதவீதம் பேர் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர். துணை முதல்வர் மவுர்யா இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர். இதனால் இதர பிற்படுத் தப்பட்டோரின் ஆதரவு தங்களுக்கு குறையாது என பா.ஜ., கருதுகிறது. உ.பி.,யில் வளர்ச்சி அரசியலை விட ஜாதி அரசியல் தான் தற்போது அதிகமாக பேசப்படுகிறது.அதனால் இப்போதுள்ள நிலையில் ஆட்சியை தக்க வைக்க நெருப்பாற்றில் நீந்தி வர வேண்டிய நிலையில் யோகி ஆதித்யநாத் உள்ளார்.
அதிருப்தியாளர்கள் ஓடுவது ஏன்?துணை முதல்வர் விளக்கம்!
உத்தர பிரதேச மாநில துணை முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான மவுர்யா கூறியதாவது:உ.பி.,யில் கடந்த முறை பெற்ற வெற்றியை விட இம்முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்போம். ஜாதி அரசியலை வைத்து வெற்றி பெற்றுவிடலாம் என அகிலேஷ் கனவு காண்கிறார்; அது நடக்காது. ஐந்து ஆண்டு கால ஆட்சியில் பல சாதனைகளை செய்துள்ளோம்.
பா.ஜ., ஆட்சி மீது இதுவரை எதிர்க்கட்சிகளால் எந்த ஊழல் குற்றச்சாட்டையும் சுமத்த முடியவில்லை. கட்சியிலிருந்து விலகியவர்கள் ஏற்கனவே வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள் தான். தொகுதி பணிகளை சரியாக செய்யாதவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதில்லை என கட்சி தலைமை முடிவு செய்துள்ளது; இதை அறிந்து தான் கட்சியிலிருந்து சிலர் விலகியுள்ளனர். இவர்களில் பலர் வாரிசு அரசியல் நடத்தியவர்கள்.
தேர்தல்களில் தங்கள் வாரிசுகளுக்கு பா.ஜ., மேலிடம் சீட் தராது என தெரிந்ததால், இவர்கள் ஓட்டம் பிடிக்கின்றனர்; இது மக்களுக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது சிறப்பு நிருபர் -