வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தஞ்சாவூர்: கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு, புவிசார் குறியீடுக்கான அங்கீகாரம் கேட்டு, புவிசார் குறியீடு வக்கீலும், அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி சங்கத் தலைவருமான சஞ்சய் காந்தி விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக, தஞ்சாவூரில் அவர் கூறியதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒன்பது பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஆனால், விவசாயம் சார்ந்த பொருட்களுக்கு, இதுவரை புவிசார் குறியீடு கிடைக்கவில்லை. அதனால், புகழ்பெற்ற கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கேட்டு, சென்னையில் உள்ள புவிசார் குறியீடு பதிவகத்தில், 13ம் தேதி விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சோழவந்தான் வெற்றிலை, ஆத்துார் வெற்றிலையை விட, காவிரி படுகையில் கும்பகோணம் பகுதியில் விளையும் வெற்றிலை சிறப்பு பெற்றது.

பூம்புகாருக்கு அருகே ராதாநல்லுாரில் உள்ள சிவாலயத்தின் கல்வெட்டுகளின் ஆதாரம், உறையூர்.திருக்காம்புலியூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளில் கிடைத்த பாக்குவெட்டிகளில், கி.பி., 10 முதல் 14ம் நுாற்றாண்டு காலத்திலிருந்தே, காவிரி படுக்கையில் வெற்றிலையை வைத்து தாம்பூலம் வழங்கும் வழக்கம் இருப்பதை, அகழ்வாராய்ச்சி உறுதி செய்துள்ளது.அதனால், கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கேட்டு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளையை சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படும் பூக்களின் வாசம், மற்ற பூக்களின் வாசத்தை விட தனித்துவமாக உள்ளது.தோவாளையில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு, பின்னப்படும் பூக்களுக்கு இந்தியாவில் மவுசு அதிகளவில் உள்ளது. வெள்ளை, சிவப்பு அரளிப்பூக்களை சம அளவில் கட்டுகிற போது, அது மாணிக்கம் போல தோற்றமளிப்பதால் மாணிக்கமாலை என்று பெயர் பெற்றது.
திருவாங்கூர் மகாராஜா, இந்த மாலையை பார்த்து, தங்கத்தின் மீது மாணிக்கத்தை வைத்தது போல இருப்பதாக கூறி, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் திருவிழாக்களுக்கு, இந்த மாலையை பயன்படுத்தியுள்ளார். இந்த பூக்கள், தமிழகத்தில் பரவலாக விளைந்தாலும், இந்த ஊரில் உள்ள கைவினை கலைஞர்களுக்கு மட்டும் தான் சரியான கலை நுணுக்கத்தோடு, சரியான மடிப்புத் தன்மை மாறாமல், பூக்களின் பாகம் சேதமடையாமல் கட்டுகின்ற பாங்கு உள்ளது. அதனால், தோவாளை மாணிக்க மாலை கைவினை கலைஞர்கள் சார்பில், புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE