வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், ௩௦ இடங்களில் முதற்கட்டமாக சுரங்க ரயில் நிலையங்கள் கட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதற்காக சுரங்கம் தோண்டும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்கள், சீனாவில் தயாராவதால், ஜூனில் இப்பணிகள் துவங்கும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், முதல்கட்டமாக மாதவரம் - சிறுசேரி சிப்காட் இடையே மாதவரம் - தரமணி இணைப்பு சாலை வரையும், மாதவரம் - சோழிங்கநல்லுார் இடையே மாதவரம் - சி.எம்.பி.டி., வரையும் 52.01 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் இடையேயும் மெட்ரோ பாதை பணி நடக்கிறது. இப்பாதைகளில், 12 இடங்களில் பாதை மற்றும் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன.
இப்பணிகள் குறித்து மெட்ரோ ரயில் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:மெட்ரோ ரயில் முதல் திட்டத்தில் நிலையங்கள், நடைமேடைகள் பெரிதாக கட்டப்பட்டன. பல இடங்களில் இடம் வீணாக உள்ளது. இதனால் இரண்டாம் கட்ட திட்டத்தில், நிலையங்கள், நடைமேடைகள், பயணியர் பயன்பாட்டுக்கு தேவையான வசதிகள், செலவு அதிகரிக்காத வகையிலும், விரைவாக கட்டுமான பணிகள் நடக்க ஏதுவாகவும், திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.பணிகளை விரைவாக முடிக்க, திறமையான அதிகாரிகள் திட்ட பணிகளின் தலைமை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். விரைவாக பணி முடிக்கும் வகையில், ஒப்பந்ததாரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து, ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கொரோனா தாக்கம், ஊழியர்கள் பற்றாக்குறையால் இரண்டாம் கட்ட திட்டத்தில், ஆரம்ப கட்ட பணிகள் சற்று தாமதமாகின. தற்போது பணி துரிதமாக நடந்து வருகிறது. இதனால் முதல் கட்டமாக முடிக்க வேண்டிய பாதை, நிலையங்கள் கட்டும் பணிகளில், 12 இடங்களில் பணி துரிதமாக நடந்து வருகிறது.மெட்ரோ முதல் திட்டத்தில், சுரங்கப்பாதை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், நிலையங்கள் கட்டுமான பணிகளும் தாமதமாகின.
முதற்கட்ட திட்டத்தில் பெரிய சாலைகளிலும், பெரிய இடங்களிலும், நிலையங்கள், பாதைகள் அமைக்கும் பணி நடந்தது. ஆனால், இரண்டாம் கட்ட திட்டத்தில், சிறிய பாதைகளிலும், வாகன போக்குவரத்துக்கு இடைஞ்சலான சிறிய இடங்களிலும், நிலையங்கள், சுரங்கப்பாதைகள், தரைக்கு மேல் பாதைகள் கட்டப்பட உள்ளன.தனியார் இடங்களை அதிகம் கையகப்படுத்தாமல், அரசு நிலத்தை அதிகம் பயன்படுத்தும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதால், பணிகளை விரைவாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இரண்டாம் கட்ட திட்டத்தில், முதலில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. மாதவரம் - தரமணி இணைப்பு சாலை வரை, 30 நிலையங்கள் சுரங்கத்தில் கட்டப்பட உள்ளன. பூந்தமல்லி பை பாஸ் - கலங்கரை விளக்கம் மெட்ரோ பாதையில், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் - கலங்கரை விளக்கம் இடையே சுரங்கத்தில் 12 நிலையங்களும், மாதவரம் - சோழிங்கநல்லுார் மெட்ரோ பாதையில் ஆறு நிலையங்கள் என, மூன்று வழித்தடங்களிலும், 48 நிலையங்கள் சுரங்கத்தில் அமைகின்றன.

இதன் கட்டுமான பணியை விரைவாக முடிக்க திட்டமிடப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகின்றன.மெட்ரோ முதல் திட்டத்தில், சுரங்கம் தோண்ட 12 இயந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டன.தற்போது முதல் கட்டமாக 30 நிலையங்கள் இடையே சுரங்கப்பாதை அமைக்க, 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் வெளிநாட்டில் இருந்து, ஒப்பந்ததாரர்களால் கொண்டு வரப்பட்டுள்ளன. சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த இயந்திரங்களை மெட்ரோ நிர்வாகம் ஆய்வு செய்து அனுமதி அளித்த பின், கப்பலில் சென்னை துறைமுகம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சுரங்கம் தோண்டும் பகுதிக்கு கொண்டு வரப்படும்.
இந்த இயந்திரங்கள் ஒப்பந்த கட்டுப்பாடுகளின் படி தயாரிக்கப்பட்டுள்ளதா, என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, ஒப்புதல் அளித்த பின் தான், சீனாவில் இருந்து இயந்திரங்கள் கப்பலில் ஏற்றப்படும்.அதிகாரிகளின் சீன பயணம், கொரோனா தாக்கத்தால் தாமதமாகி உள்ளது.மே மாதத்துக்குள் அதிகாரிகள் சீனா சென்று, இயந்திரங்களை ஆய்வு செய்வர். மே மாதம் இயந்திரங்கள் கப்பலில் ஏற்றப்பட்டால், மாத இறுதியில் சென்னை வந்துவிடும். ஜூன் மாதம் மெட்ரோ சுரங்கப்பாதை தோண்டும் பணி துவங்கப்படும். இவ்வாறு அதிகாரி கூறினார்.
திட்டம் ஒரு பார்வை!
இரண்டாவது கட்ட திட்ட மதிப்பீடு - ரூ.61,843 கோடி
வழித்தடம் - மூன்று
மொத்த துாரம் -118.9 கி.மீ.,
நிலையங்கள் - 128
பகுதி - 1
மாதவரம் - சிறுசேரி சிப்காட்
துாரம் - 45.8 கி.மீ.,
மொத்த நிலையம் - 50
சுரங்க நிலையம் - 30
தரைக்கு மேல் நிலையம்- 20
பகுதி - 2
பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம்
துாரம் - 26.1 கி.மீ.,
மொத்த நிலையம் - 30
சுரங்க நிலையம் - 12
தரைக்கு மேல் நிலையம்-18
பகுதி - 2
மாதவரம் - சோழிங்கநல்லுார்
துாரம் - 47 கி.மீ.,
மொத்த நிலையம் - 48
சுரங்க நிலையம் - 42
தரைக்கு மேல் நிலையம்- 6
ஒரு இயந்திரம் ரூ.60 கோடி!
சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஒன்றின் விலை 60 கோடி ரூபாய். இது ஆறு பிரிவுகளாக 90 மீட்டர் நீளம் உடையது. இயந்திரத்தின் முன்பகுதியில், சுரங்கம் தோண்டும் கட்டர் பகுதி மட்டும் 15 மீட்டர் நீளம் உடையது. ஒவ்வொரு இயந்திரமும் ஒரு மினி தொழிற்சாலை என சொல்லப்படும் அளவுக்கு, நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட திட்டத்தில், குறுகிய சாலைகளின் கீழ் சுரங்க நிலையங்கள் கட்டப்படுவதால், சுரங்கம் தோண்டும் இயந்திரங்களை சாலைகளில் இறக்கி வைக்க இடவசதி இல்லை. இதனால் இயந்திரங்கள் சென்னை வருவதற்குள், 30 சுரங்க நிலையங்களின் நான்கு புறங்களில், 'டயாப்ராம் வால்' என்ற, பாதுகாப்பு சுற்றுச்சுவர், 25 - 28 மீட்டர் ஆழம் வரை கட்டப்பட்டு, உட்புறம் சுரங்கம் தோண்டுவதற்கு ஏதுவாக பள்ளம் தோண்டும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள், பகுதி பகுதியாக கொண்டு வரப்பட்டு, தரையில் இறக்கி வைக்காமல், நேரடியாக சுரங்கம் தோண்டும் பள்ளத்தில் இறக்கி வைக்கப்பட்டு, ஒன்றிணைக்கப்படும். பின்னர் சுரங்கம் தோண்டப்படும்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE