திருவள்ளூர்: கொரோனா தொற்றின் மூன்றாம் அலையில், திருவள்ளூர் மாவட்டத்தில், 8,293 பேர் பாதிக்கப்பட்டு, மாநிலத்தில், நான்காம் இடத்தை பிடித்துள்ளது. தினசரி, பாதிப்பு, அதிகரித்து வரும் நிலையில், மக்களிடம் சமூக இடைவெளி, பாதுகாப்பு கவசமின்மை கவலையளிப்பதாக சுகாதார துறையினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நாடு முழுதும், கொரோனா தொற்றின் மூன்றாம் அலை வேகமாக பரவி வருகிறது. முக கவசம், சமூக இடைவெளி அவசியத்தை, சுகாதார துறையினர், விழிப்புணர்வு, அபராதம், எச்சரிக்கை என, பல வகையிலும், அறிவுரை வழங்கினாலும், மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாததை, தொற்று பரவலுக்கு வழி வகுக்கிறது.
உயர்வு
திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த, டிச., 31, 2021 வரை, கொரோனா பாதிப்பு, ஒரு லட்சத்து, 18 ஆயிரத்து, 808 ஆக இருந்தது. இதில், ஒரு லட்சத்து, 20 ஆயிரத்து, 897 பேர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருந்தனர். 1,863 பேர் இறந்த நிலையில், 306 பேர் மட்டும், மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமை சிகிச்சையில் இருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.கடந்த, 1ம் தேதி, 306 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்த நிலையில், 14 நாட்களில், பல மடங்கு அதிகரித்து, நேற்றுமுன்தினம் ஒரே நாளில், 1,393 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு, படிப்படியாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வரை, 8,293 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, ஜன.4 - 14ம் தேதிக்குள் மட்டும், தொற்று பாதிப்பு, விர்ரென அதிகரித்தது. இதன்படி, தற்போது கொரோனா தொற்றில், மாநிலத்தில், சென்னை, செங்கல்பட்டுக்கு அடுத்ததாக, திருவள்ளூர் மாவட்டம் நான்காவது இடத்தில் உள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின்படி, வருவாய், உள்ளாட்சி, சுகாதாரம், காவல் துறையினர், மாவட்டம் முழுதும், பொது இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இறப்பும், ஆயிரத்து 875 ஆக உள்ளது. தற்போது, மாவட்டத்தில், மொத்த பாதிப்பு, ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 727 ஆகவும், சிகிச்சை முடிந்து, ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 456 பேர் வீடு திரும்பி உள்ளனர்.மருத்துவமனை, வீடுகளில், 6 ஆயிரத்து 396 பேர் சிகிச்சை பெற்று வருவதாக, சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
படுக்கை வசதி
திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க, சுகாதார துறை சார்பில், மருத்துவமனைகளில், 1,045 ஆக்சிஜன் படுக்கை, 718 சாதாரண படுக்கை மற்றும் 221 அவசர சிகிச்சை படுக்கை வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி, 156 படுக்கைகள் மட்டும் நிரம்பி உள்ளது.
இதை தவிர, பட்டரைப்பெரும்புதுார், பூந்தமல்லி உட்பட பல்வேறு இடங்களில், 'கோவிட்' பாதுகாப்பு மையங்களில், 1,331 படுக்கை வசதிகள் தயாராக உள்ளதாக, சுகாதார துறையினர் தெரிவித்தனர். மேலும், ரயில் பயணியருக்கு இரண்டு 'டோஸ்' தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே புறநகர் ரயிலில் பயணிக்க முடியும் என, ஆறு தினங்களுக்கு முன் ரயில்வே நிர்வாகம் தெரிவித்து இருந்தது. அதன்படி, திங்கட்கிழமை இந்த நடைமுறை பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால், செவ்வாய்க்கிழமையான நேற்று, புறநகர் ரயில் நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகள் இருந்தன. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காண்பித்தால் மட்டுமே ரயில் டிக்கெட் வழங்கப்பட்டது.
போலீசார் சோதனை
இதனால், தடுப்பூசி செலுத்தாதவர்கள், ரயில் டிக்கெட் எடுக்காமலேயே ரயிலில் பயணிப்பதாக புகார் எழுந்ததால், பயணியர் ரயில் டிக்கெட் வைத்துள்ளனரா என, ரயில் நிலைய பிளாட்பாரத்திற்கு செல்லும் நுழைவாயில் போலீசார் நின்று சோதனை செய்த பிறகே பயணியரை அனுமதித்தனர். இதனால், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய முடிகிறது.
தயார் நிலை

திருவள்ளூர் மாவட்டத்தில், 30 - 40 எண்ணிக்கையில் இருந்த கொரோனா தொற்று, தற்போது, ஆயிரத்தை கடந்து விட்டது. அரசு விதித்துள்ள விதிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். இதற்காக மாவட்ட, தாலுகா, கோட்ட அளவில் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில், கட்டுப்பாட்டு மையமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில், 84 சதவிதம் முதல் தவணை தடுப்பூசியும், 55 சதவிதம் இரணடாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்த வரை, ஆபத்தான சூழ்நிலை ஏதுமில்லை. போதுமான படுக்கை வசதி உட்பட அனைத்து மருத்துவ வசதிகளும், மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்களும் தயார் நிலையில் உள்ளனர்.
அல்பி ஜான் வர்கீஸ், கலெக்டர், திருவள்ளூர் மாவட்டம்.
முக கவசம் அபராதம் ரூ.500
முக கவசம் அணியாதோரிடம், 200 ரூபாயாக இருந்த அபராதம், 500 ரூபாயாக உயர்த்தி, சுகாதார துறையினர் உத்தரவிட்டனர். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பொதுமக்கள் சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க வேண்டும் என்பது அரசின் நோக்கம் அல்ல.நம்மையும், நம்மை சார்ந்தவர் களையும் நாம் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு நமக்குள்ளே ஏற்படுத்தும் விதமாகவும், முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் முக கவசத்தின் அவசியத்தை உணர்ந்து முறையாக முக கவசங்களை அணிந்து, கைகளை சுத்தமாகவும், சமூக இடைவெளியுடன் பொது இடங்களில் கடைப்பிடிப்பது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும். இவ்வாறு சுகாதார துறையினர் தெரிவித்தனர்
.57 ஆயிரம் பரிசோதனை
கடந்த ஜன.,1 - 13ம் தேதி வரை, திருவள்ளூர் மாவட்டத்தில், 57 ஆயிரத்து, 763 பேர், கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில், 6,594 பேருக்கு, தொற்று உறுதியாகி உள்ளது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE