விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லுாரிகளை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்றார்; தமிழில் வணக்கம் கூறினார்; தமிழின் பெருமையை பேசினார். ஆனால், ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கையான, 'நீட்' வேண்டாம் என்ற கோரிக்கையை பொருட்படுத்தவில்லை.
ஒட்டுமொத்த தமிழர்களின் கோரிக்கை என யார் சொன்னது. கடந்த, நீட் தேர்வை தமிழகத்திலிருந்து, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோர், கல்வியாளர்கள் அனுமதியுடன் எழுதியுள்ளனர் என்பதை பக்குவமாக மறைக்கிறீர்களே!
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: ஆங்கில புத்தாண்டு நாளில், அதிகாலையில் பக்தர்களை, கிறிஸ்தவர்களை அவர்களின் வழிபாட்டு தலங்களில் வழிபட அனுமதித்த தமிழக அரசு, வைகுண்ட ஏகாதசி அன்று கோவில்களில் பக்தர்களை வழிபட அனுமதி மறுத்தது போலி மதச்சார்பின்மை மட்டுமல்ல, தி.மு.க., அரசின் மதவாதமாகும்.
அவர்களின் போலி மதவாதம் தான் உலகம் அறிந்தது ஆயிற்றே. கிறிஸ்துவர்களை வழிபட அனுமதி மறுத்ததால், அவர்களின் ஓட்டு, தி.மு.க.,வுக்கு கிடைக்காமல் போய் விடும் என, தி.மு,.க., அரசு நினைத்திருக்கும்.
காங்., மூத்த தலைவரும், தமிழகத்தை சேர்ந்தவருமான முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் அறிக்கை: உ.பி., - பா.ஜ., முதல்வர் ஆதித்யநாத் கருத்துபடி, பிராமணர்கள் என்றால், நிறைய கற்றவர்கள் என்று அர்த்தமாம். அதுபோல, உ.பி.,யில், 80 சதவீத வாக்காளர்கள் தேசியவாதிகளாம்; 20 சதவீதம் பேர் தேச விரோதிகளாம். அந்த மாநிலத்தில், 19 சதவீதம் பேர் முஸ்லிம்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பிராமணர்கள் என்றால், தி.மு.க.,வுக்கும், அதன் சில தலைவர்களுக்கும் தான் வேப்பங்காயாக கசக்கும். அந்த பட்டியலில் இப்போது நீங்களும் இணைந்து விட்டீர்களோ?

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: கர்நாடகாவில் மேகதாது என்ற இடத்தில், கர்நாடகா அரசு அணையை கட்ட வேண்டும் என, அந்த மாநில காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. தமிழர்களுக்கு எதிரான அந்த போராட்டங்களை உடனடியாக காங்., கைவிட வேண்டும்.
தப்பித்தவறி, தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் இப்படி கேட்டு விடாதீர்கள். அவர்கள், கர்நாடகா காங்கிரசால், தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாமல் தவியாய் தவிக்கின்றனர்!
தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை: ஈ.வெ.ரா., சிலையை அவமதித்தவர்களை, தற்போதைய, தி.மு.க., அரசு கைது செய்துள்ளது. இதுவே, முதல்வர் பழனிசாமி தலைமையிலான, முந்தைய, அ.தி.மு.க., ஆட்சியாக இருந்திருந்தால், 'ஈ.வெ.ரா., சிலையை அவமதித்தவர்கள் மனநலம் பாதித்தவர்கள்' என சொல்லி இருக்கும்.
மனநலம் பாதித்தவர்கள் தான், இதற்கு முன், இதுபோல பலரது சிலைகளை அவமதித்துள்ளனர் என்பதை, போலீசார் உறுதி செய்துள்ளனர். இதை படிக்காமல் விட்டு விட்டீர்களோ?

தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் அறிக்கை: எனக்கு, தமிழ் புத்தாண்டு சித்திரை 1ம் தேதி தான்.
உங்களைப் போன்றவர்கள் தான், தமிழக காங்கிரசுக்கு தலைமை பொறுப்பேற்க வேண்டும். இப்போதைய தலைமை, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் ஊதுகுரலாக ஒலிக்கிறது!
தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'தேடப்படும் குற்றவாளிகளுக்கு, பா.ஜ.,வில் இடமில்லை' எனக் கூறியுள்ளார். எனவே, தேடப்படாத குற்றவாளிகள் எல்லாம், பா.ஜ.,வில் சேரலாமா?
குற்றவாளிகளுக்கு, பா.ஜ.,வில் இடம் இல்லை என அண்ணாமலை சொல்லியுள்ளார். ஆனால், கட்சியில் சேர்ந்த பிறகு, குற்றவாளிகளாக மாறுபவர்கள் பற்றி, கம்யூ., என்ன கருத்து கொண்டுள்ளது?
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை: இனிமேல் ஆண்டுதோறும், ஜனவரி 15 முதல், 25 வரை உள்ள நாட்களை, தாய் தமிழ் காவலர்கள் வீர வணக்க நாட்களாக கடைப்பிடிப்போம்.
கட்சி துவக்கி, 30 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இப்போது தான் இந்த நுாதன சிந்தனை உதித்ததோ... அதற்கு காரணம், இப்போது தான் தாய் தமிழ் காவலர்கள் என்ற புதிய வார்த்தையை கண்டுபிடித்தீர்களோ?

தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை: ஆதிக்க, அடிமை அரசு விரட்டப்பட்டு, தி.மு.க., அரசு தமிழகத்தில் அமைந்த பிறகு நாம் கொண்டாடும் தமிழர் திருநாளை, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வசிக்கும் ஏழை மக்களுடன் கொண்டாடி மகிழ்ந்தோம்.
ஏழைகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் போதும், முந்தைய, அ.தி.மு.க., அரசை 'அடிமை அரசு' என கிண்டல் செய்ய தயங்குவது இல்லை போலும். இப்போதைய, தி.மு.க., அரசும், மத்திய அரசுடன் இணக்கமாகத் தான் செல்கிறது. இந்த அரசையும், அடிமை அரசு என சொல்லலாமா?
தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: சித்திரை 1ம் நாள் தான் தமிழ் புத்தாண்டு என மதுரை ஆதினம் ஹரிஹர தேசிக பராமாச்சாரியார் கூறியுள்ளார். மேலும் அவர், கோவில் விஷயத்தில் அரசியல் செய்தால் கருத்து தெரிவிக்க தயங்கவும் மாட்டேன் என்றும் கூறியுள்ளார். அவரின் கருத்து, இன்றைக்கு அவசிய தேவை.
இதற்கு முன், மதுரை ஆதினமாக இருந்தவர், பல சமயங்களில், தி.மு.க., கொள்கைகளை பின்பற்றி வந்தார். அவர் மறைவுக்கு பின் பொறுப்பேற்றுள்ள புதிய ஆதினம், உண்மையான ஆதினமாக சிறப்பாக செயல்படுகிறார் என பலரும் பாராட்டுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE