ஆதிகாலத்தில் இருந்தே சித்திரை 1 தான் தமிழ்ப்புத்தாண்டு! - மதுரை ஆதினம் நேர்காணல்

Added : ஜன 16, 2022 | கருத்துகள் (2)
Advertisement
வானுயர்ந்த மதுரை மீனாட்சி கோயில் அருகே இருந்து கம்பீரமாக இன்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருகிறது மதுரை ஆதினம் மடம். பழமையான சைவ மடங்களுள் ஒன்றான இம்மடம் திருஞானசம்பந்தரால் நிறுவப்பட்ட பெருமை உடையது. இம்மடத்தின் 293வது மடாதிபதியாக கடந்தாண்டு ஆகஸ்டில் பொறுப்பேற்றவர் ஹரிஹர தேசிக பராமச்சாரியார் 62. ஆன்மிக பேச்சாளர், தமிழறிஞர் என பன்முகம் கொண்ட இவர், தினமலர் பொங்கல் மலருக்காக
ஆதிகாலத்தில் இருந்தே சித்திரை 1 தான் தமிழ்ப்புத்தாண்டு! - மதுரை ஆதினம் நேர்காணல்

வானுயர்ந்த மதுரை மீனாட்சி கோயில் அருகே இருந்து கம்பீரமாக இன்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருகிறது மதுரை ஆதினம் மடம். பழமையான சைவ மடங்களுள் ஒன்றான இம்மடம் திருஞானசம்பந்தரால் நிறுவப்பட்ட பெருமை உடையது. இம்மடத்தின் 293வது மடாதிபதியாக கடந்தாண்டு ஆகஸ்டில் பொறுப்பேற்றவர் ஹரிஹர தேசிக பராமச்சாரியார் 62. ஆன்மிக பேச்சாளர், தமிழறிஞர் என பன்முகம் கொண்ட இவர், தினமலர் பொங்கல் மலருக்காக அளித்த சிறப்பு பேட்டி.


பகவதி லட்சுமணன்... மதுரை ஆதினம் ஆனது எப்படி?நான் பிறந்தது திருநெல்வேலி. அப்பா அரசு சுகாதார ஆய்வாளர் என்பதால் அடிக்கடி இடமாற்றம் வரும். படித்தது எல்லாம் சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார். படிக்கும்போதே குன்றக்குடிக்கு அடிக்கடி செல்வேன். ஆதினத்தை சந்தித்து பேசுவேன். சமயவகுப்பு நடப்பதை அறிந்து 'நான் சேரவா' எனக்கேட்டேன். ஒத்துக்கொண்டார். அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தருமபுரம் ஆதினம், திருவாவடுதுறை ஆதினம் மடத்திற்கு இடமாறினேன். தீட்சை பெற்ற பிறகு கன்னியாகுமரிக்கு ஆதினம் மடம் நிர்வாகத்தை கவனிக்க என்னை நியமித்தார்கள். ஆவுடையார் கோயில் கும்பாபிஷேகம் பணியை செய்யும் பொறுப்பு தந்தார்கள். காஞ்சிபுரம் திருவாவடுதுறை ஆதினம் மடத்தில் 25 ஆண்டுகள் இருந்தேன். மதுரை ஆதினத்திடம் இருந்து திடீர் அழைப்பு வந்தது. 2019ல் இளைய ஆதினமாக நியமிக்கப்பட்டேன்.


அதற்கு முன் மதுரை ஆதின மடத்திற்கு வந்துள்ளீர்களா?மூத்த தம்பிரானாக இருந்த நான் மூத்த ஆதினம் அழைப்பின்பேரில் அடிக்கடி குருபூஜைக்கு வந்து செல்வேன். அப்போது எனக்கு சுந்தரமூர்த்தி தம்பிரான் என்று பெயர். இளைய ஆதினமாக பொறுப்பேற்ற பின் 2021 வரை தஞ்சை மாவட்டம் கஞ்சனுார் கோயிலில் நிர்வாக பணிகளை கவனித்து வந்தேன்.


எந்த வயதில் சன்னியாசம் பெற்றீர்கள். பெற்றோர் ஒப்புக்கொண்டார்களா?21வது வயதில் சன்னியாசம் பெற்றேன். வீட்டில் எதிர்ப்பு இருந்தது. என் ஜாதகத்தில் 21 வயதில் வீட்டை விட்டு வெளியேறி விடுவேன் என இருந்தது. அதன்படி நடந்தது. எனக்கு சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. அப்போதே என்னை வீட்டில் சாமியார் என்பார்கள்.
கல்லல் பள்ளியில் 5ம் வகுப்பில் என்னை சேர்க்க தந்தை அழைத்துச் சென்றார். தந்தை குறித்து தலைமை ஆசிரியர் கேட்டபோது எதிரே இருந்த சிவன் கோயிலை தந்தை எனக்காட்டினேன். உடலுக்குதான் இந்த தந்தை. உயிருக்கு சிவன்தான் என்றேன். ஆத்திரமுற்ற என் தந்தை என்னிடம் கடுமையாக நடந்துக்கொண்டார்.


உங்களது அன்றாட பணி...முதலில் என் சொந்த பூஜை, அடுத்து மடத்து பூஜை, திருஞானசம்பந்தர் பூஜை, பாராயணம் செய்வேன். மடத்திற்கு வருவோரை ஆசீர்வதிப்பேன். வெளியூருக்கு சென்றால், பூஜைகள் செய்யவேண்டும் என்பதால் ஒருநாளில் திரும்பி வந்துவிடுவேன்.


முந்தைய ஆதினம் அரசியல் கருத்து தெரிவிப்பது வழக்கம். நீங்கள் எப்படி?எனக்கு அரசியல் ஆர்வமில்லை. கோயில் விஷயங்கள் தொடர்பாக அரசியல் செய்தால் கருத்து தெரிவிக்க தயங்க மாட்டேன்.


தை 1 தான் தமிழ்ப்புத்தாண்டு என தி.மு.க., அரசு சொல்கிறதே?ஆதிகாலத்தில் இருந்தே சித்திரை 1ல் தான் தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு இலக்கியத்தில் ஆதாரங்கள் உள்ளன. முன்னோர் கடைபிடித்து வருவதை நாம் மாற்றக்கூடாது.


கோயில், மடத்தின் குத்தகை பணம் தரமறுப்பவர்கள் பெருச்சாளி, வவ்வால் ஆக பிறப்பார்கள் என கோபத்தோடு சாபம் விட்டீர்களே...அப்படி சொன்னாலாவது பயந்து தருவார்கள் எனக்கருதியே சொன்னேன். அது சாபம் அல்ல. அட்வைஸ். அப்படியும் தரமறுப்பவர்களிடம் பேசி தீர்வு காண்போம். அதுவும் முடியவில்லை என்றால் வழக்குதான். நான் பொறுப்புக்கு வந்தபிறகு நீதிமன்றத்திற்கு செல்லாமல் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அதில் வெற்றியும் கிடைத்து வருகிறது.


எவ்வளவோ உயிரினங்கள் இருக்கும்போது வவ்வால், பெருச்சாளி என்று கூறியதேன்?அவைதான் கோயில்களிலேயே இருந்து காலத்தை போக்குகின்றன. இடையூறு என்று அடித்துக் கொல்கிறார்கள். அந்த அர்த்தத்தில்தான் சொன்னேன்.


ஆதினத்தின் பொழுதுபோக்கு...அடிப்படையில் நான் ஒரு பேச்சாளன். ஓய்வு கிடைக்கும் நேரத்தில் புத்தகங்கள் அதிகம் படிப்பேன். அதில் உள்ள கருத்துக்களை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து வருகிறேன்.


ஹிந்து மதத்துடன் உங்கள் பணிகள்..நான் தம்பிரானாக இருந்தபோது மத வளர்ச்சிக்காக தமிழகம் முழுவதும் பாதயாத்திரை சென்றேன். இன்று ஹிந்துக்கள் மதம் மாறாமல் இருக்க என்னாலான பணிகளை செய்து வருகிறேன்.


அடுத்த இளைய ஆதினம் யார் என முடிவு செய்து விட்டீர்களா?நான் பொறுப்பேற்று 5 மாதங்கள்தான் ஆகியுள்ளது. இளைய ஆதினம் நியமிக்க அவசரமும், அவசியமும் இப்போது இல்லை. அதற்கான காலம் வரவேண்டும். இறைவன் தகுதியானவரை அனுப்புவார் என நம்பிக்கை உள்ளது.


தமிழ் மொழியோடு தொடர்பு உடையது மதுரை ஆதினம் மடம். இன்று தமிழ்வளர்ச்சிக்கு மடத்தின் பணிகள் என்ன?திருஞானசம்பந்தர் இல்லை என்றால் தமிழ் இல்லை. தமிழில் முதல் மதிப்பெண் பெறும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க உள்ளேன். வைகாசி முதல் தமிழாகரன் என்ற மாதபத்திரிகை வெளியிட உள்ளேன். பொருளாதார ரீதியாக சிரமப்படும் தமிழ் புலவர்களுக்கு ஆதரவளித்து வருகிறேன். கோயில்களில் ஓதுவார் நியமிக்க உள்ளேன். தமிழ் ஆய்வாளர்களை கொண்டு நுால்கள் எழுதி வெளியிட உள்ளோம். மடத்தோடு தொடர்பு உடைய முத்துராமலிங்க தேவர், வ.உ.சி., மருதுபாண்டியர், மங்கையர்க்கரசி, திருஞானசம்பந்தர், பாண்டித்துரை தேவர், கிருபானந்த வாரியார், வள்ளலார் பெயர்களில் விருது வழங்க உள்ளோம்.


மன்னர் காலத்தில் கடல் கடந்து ஆதினத்தின் பணிகள் இருந்தன. இன்று...எனக்கு கடல் கடந்து செல்ல விருப்பமில்லை. அழைப்புகள் வருகின்றன. சமீபத்தில்கூட காசியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தது. ஆனால் இங்கேயே செய்ய வேண்டிய பணிகள் அதிகம் இருக்கிறதே.


நீங்கள் இளைஞனாக இருந்தபோது ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டீர்கள். இன்றைய இளைஞர்கள் அப்படி இருக்கிறார்களா?இல்லை என்பது வருத்தமாக உள்ளது. தேச பக்தி, தெய்வபக்தி இளைஞர்களிடம் இல்லை. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று இருக்கிறார்கள். பெரும்பாலும் சினிமா, அரசியலில்தான் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். எல்லா கூட்டங்களிலும் நரைத்த தலைதான் தெரிகிறது. 'கறுத்த' தலையாக மாற்ற வேண்டும். அவர்களை சீர்த்திருத்த வேண்டும் என்பதுதான் எனது எதிர்கால திட்டங்களில் ஒன்று.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
10-பிப்-202211:16:15 IST Report Abuse
sankar இந்த செய்தியை ஒரு நூற்றாண்டு காலம் அப்படியே வைத்திருக்கலாம்.
Rate this:
Cancel
Mayuram Swaminathan - Chennai,இந்தியா
05-பிப்-202212:25:44 IST Report Abuse
Mayuram Swaminathan மதுரை ஆதிநகர்தரின் கருத்துகள் வரவேற்கப்படவேண்டியதாக உள்ளன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X