வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மெல்போர்ன்: தடுப்பூசி போடாததால், பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டதை ஆஸ்திரேலியா நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால், அவர் அங்கிருந்து வெளியேற்றப்படுவார் என தெரிகிறது.
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நாளை மெல்போர்னில் துவங்கவுள்ளது. இதில் பங்கேற்கும் நட்சத்திரங்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இத்தொடரில் 9 முறை கோப்பை வென்ற, உலகின் 'நம்பர்-1' வீரர், செர்பியாவின் ஜோகோவிச், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை.

மெல்போர்ன் சென்ற இவரது விசா ரத்து செய்யப்பட, குடியேற்றத்துறை அதிகாரிகள் சார்பில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இதை எதிர்த்து நடந்த வழக்கில் வெற்றி பெற்ற ஜோகோவிச், மெல்போர்ன் மைதானத்தில் பயிற்சியை துவங்கினார். ஆனால் குடியேற்றத்துறை விதிகளின் படி, அமைச்சர் அலெக்ஸ் ஹாகே, ஜோகோவிச் விசாவை மீண்டும் ரத்து செய்தார். ஜோகோவிச் விசா மீண்டும் ரத்தானதை எதிர்த்து அவரது வக்கீல்கள் உடனடியாக அப்பீல் செய்தனர். இதை விசாரித்த கோர்ட், இரு தரப்பிலும் போதிய ஆதாரங்களை வழங்க கால அவகாசம் கொடுத்து, வழக்கை இன்று ஒத்தி வைத்தது.

சட்ட விதிகள் சம்பந்தப்பட்டது என்பதால் மூன்று நீதிபதிகள் அடங்கிய 'பெஞ்ச்' இன்று வழக்கை விசாரித்தது. அப்போது, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பங்கேற்பதில் ஜோகோவிச்சுக்கு சிக்கல் ஏற்பட்டதுடன், அவர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE