கவுண்டம்பாளையம், அசோக் நகர் மேல் பகுதியில், துடியலுார் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சரளா, 56, செந்தில்குமார், 34, ஆகியோர் அனுமதியின்றி, மது விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.போலீசார் அவர்களிடமிருந்து, 70 குவாட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.வீடுபுகுந்து நகை திருட்டுபெரியநாயக்கன்பாளையம் அருகே வீரபாண்டி, விக்னேஷ் அவென்யூவில் வசித்து வருபவர் பாலசண்முகம், 51; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவர், கேரளாவில் உள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று விட்டு, வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.வீட்டுக்குள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த, தங்க தாலி செயின் மற்றும் தங்க கம்மல்கள், மோதிரங்கள் உள்ளிட்ட, 11 பவுன் எடையுள்ள தங்க நகைகள் காணாமல் போயிருந்தன. இச்சம்பவம் குறித்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மொபைல் பறித்த மூவர் கைது
கவுண்டம்பாளையம், சேரன் நகரை சேர்ந்தவர் தீபக் சக்ரா, 50. இவர், அப்பகுதியில் மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தபோது, நான்கு பேர் அவரை மிரட்டி, அவர் வைத்திருந்த மொபைல் போனை பறித்து சென்றனர்.இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரித்த துடியலுார் போலீசார், கவுண்டம்பாளையம், பிரபு நகர், பரத்வாஜ், 20; நல்லாம்பாளையம், சக்தி நகர், நவநீதகிருஷ்ணன், 19; துடியலூர், நேரு நகர், லாரன்ஸ், 22 ஆகிய மூவரையும் கைது செய்தனர். தலைமறைவான சபரி என்பவரைத் தேடி வருகின்றனர்.
'போக்சோ'வில் வாலிபர் கைது
மேட்டுப்பாளையம் அன்னுார் சாலையை சேர்ந்தவர் மொகைதீன், 27. இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக, பணியாற்றி வருகிறார்.இவருக்கும், மேட்டுப்பாளையம் நகரில் மருந்து கடையில் வேலை செய்யும், 16 வயது சிறுமிக்கும், பழக்கம் ஏற்பட்டுள்ளது.அந்தச் சிறுமியை ஆசை வார்த்தை கூறி, கடைகளுக்கு அழைத்துச் சென்று ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்துள்ளார்.
நேற்று முன்தினம் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். தகவலறிந்த சிறுமியின் தாய், மேட்டுப்பாளையம் போலீஸில் புகார் செய்துள்ளார். மேட்டுப்பாளையம் போலீசார், வழக்குப்பதிவு செய்து, மொகைதீனை, 'போக்சோ' சட்டப்பிரிவில் கைது செய்து, விசாரிக்கின்றனர்.
போதை புகையிலை விற்றவர் கைது
துடியலுார் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நேரு வீதியில் உள்ள பெட்டிக் கடை ஒன்றில், போலீசார் நடத்திய சோதனையில், 38 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.அவற்றைப் பறிமுதல் செய்த துடியலுார் போலீசார், இதுதொடர்பாக, நேரு வீதி, நந்தகுமார், 52; செங்காளி பாளையம், ரங்கநாதன்,38, இருவரையும், கைது செய்தனர்.
சேவல் சண்டை: 5 பேர் மீது வழக்குதுடியலுார் அருகே கதிர்நாயக்கன்பாளையம் குட்டை பகுதியில், சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.துடியலுார் போலீசார் நடத்திய சோதனையில், அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன், 32; கோபிநாத், 33; அப்பாஸ் அரவிந்த், 32; ராக்கிபாளையம் முத்துக்குமார், 33; கணேசன், 30; ஆகிய, 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.