வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை:அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு, பிளஸ் ௧ மற்றும் பிளஸ் ௨ மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, வரும் ௩௧ம் தேதி வரை, 'ஆன்லைன்' வழியில் பாடங்கள் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று பரவலில் இருந்து மாணவர்களை காக்க, அரசு இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. இதன் காரணமாக, 19ம் தேதி முதல் நடக்கவிருந்த திருப்புதல் தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. பின், கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால், 2021செப்டம்பர் 1ல் கல்லுாரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் துவங்கின. ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் துவங்கின. அதன்பின், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கடந்த நவம்பர் 1 முதல் நேரடி வகுப்புகள் துவங்கின.
விடுமுறை
இந்நிலையில், 2021 டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 2 வரை அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. ஆனால், 'ஒமைக்ரான்' தொற்று பரவல் அதிகரித்ததால், ஜனவரி 3 முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படாது என்றும், ஜனவரி 31 வரை 'ஆன்லைன்' வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அரசு அறிவித்தது.
மேலும், கல்லுாரி மாணவர்களுக்கும் 31ம் தேதி வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன; செமஸ்டர் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டன. அதேநேரம், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடந்து வந்தன. இந்த மாணவர்களுக்கு, பள்ளிகளில் முகாம் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருப்புதல் தேர்வு
பின், 14ம் தேதி முதல் 18 வரை பொங்கல் பண்டிகை விடுமுறை விடப்பட்டது. அதை தொடர்ந்து, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, அன்று முதல் திருப்புதல் தேர்வு கள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. பொதுத்தேர்வை போல, திருப்புதல் தேர்வையும் மிகுந்த கட்டுப்பாடுடன் நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.
இந்நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தும், தேர்வுகளை தள்ளிவைத்தும், தமிழக அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாணவர் நலன்
அதன் விபரம்:கொரோனா காரணமாக, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 10 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாகவும், மாணவர்களின் நலன் கருதியும், வரும் 31ம் தேதி வரை, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
தள்ளி வைப்பு
இதையடுத்து, 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு, 19ம் தேதி முதல் நடக்கவிருந்த திருப்புதல் தேர்வுகளும் தள்ளி வைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வரும் 31ம் தேதி வரை, பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டு இருந்தாலும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, ஆன்லைன் வழியில் பாடங்கள் நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது' என்றனர்.***
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE