உடுமலை:மாநில நெடுஞ்சாலையிலுள்ள, பாலத்தில், 'தினமலர்' செய்தி எதிரொலியாக, நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், பெதப்பம்பட்டி அருகேயுள்ள உப்பாறு ஓடையின் குறுக்கே, தரைமட்ட பாலம் மட்டுமே இருந்தது.கடந்த 2017ல், நபார்டு ஆர்.ஐ.டி.எப்., திட்டத்தின் கீழ், 2 கோடியே 75 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதியில், 10.42 மீ., நீளத்துக்கு, உயர் மட்ட பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு, 2019ல், பணிகள் நிறைவு பெற்றது.நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள், பொள்ளாச்சி உட்கோட்டத்தின் கீழ், பாலம் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில், சமீபத்தில், பாலத்தில், இரு துாண்களுக்கு இடையிலான, இடைவெளியை நிரம்பும் பகுதியில், ஓடுதளம் முற்றிலுமாக சேதமடைந்து, பள்ளம் ஏற்பட்டது. அப்பகுதியில், பல அடி துாரத்துக்கு, கான்கிரீட் கம்பிகள் வெளியே நீட்டி, அவ்வழியாக செல்லும் வாகனங்களை பதம் பார்த்து வந்தது குறித்து, தினமலரில் செய்தி வெளியானது. இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில், பாலத்தில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பாலத்தில், நான்குக்கும் மேற்பட்ட இடத்திலிருந்த, குழிகளை, கான்கிரீட் பூச்சு அமைத்து, மேலே தார் ஊற்றி, சீரமைத்துள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.