பழநி : கடைச்சங்க காலத்தில் கடையெழு வள்ளல்கள் பாரி, ஓரி, காரி, நள்ளி, ஆய், பேகன், அதிகன் (அதியமான்) வாழ்ந்த தமிழகத்தில் அவர்களின் பெருமையை ஆங்காங்கே கேட்டு கடந்து சென்றுவிடுகிறோம். அவர்கள் எங்கு, எக்காலத்தில் வாழ்ந்தவர் என்பதை ஆராய நம்மில் பலருக்கு நேரமுமில்லை... ஆர்வமுமில்லை.
பழநி மலையை சுற்றியுள்ள ஆயக்குடி, பொருந்தல் பகுதிகள் சங்ககாலத்தில் வையாபுரி நாடாக வளமுடன் இருந்தது. இதில் பொருந்தல் பகுதியானது தற்போதுள்ள பழநியில் இருந்து 12 கி.மீ., தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. மலையும், நிலமும் பொருந்தும் பகுதியே தமிழில் 'பொருந்தல்' என்றாகியுள்ளது.சங்ககாலத்தில் 'வைகாவி நாடு' என அழைக்கப்பட்ட இப்பகுதி 'வேளாவிக்கோ பெரும் பேகன்' ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது. கடையெழு வள்ளல்களில் ஒருவரான பேகன் கதை நமக்குத் தெரிந்ததே.
குளிரில் நடுங்கிய மயிலின் அவதியைப் போக்க போர்வை தந்து, வள்ளலான கதையை சங்க கால புலவர்கள் தனிப்பாடல்களில் பாடி உள்ளனர். இத்தகைய மன்னன் ஆண்ட வைகாவிநாடு பகுதியில் அமைந்த பொருந்தல் பகுதிக்குள் 'பாசிமேடு' எனும் பகுதி உள்ளது. இங்கு அக்காலத்தில் கல் அணிகள், கண்ணாடி பாசிகள், மணிகள், சிவப்பு, மஞ்சள், நீலம், வெள்ளை, வண்ணம் கொண்ட பாசிகள் தயாரிக்கப்பட்டதற்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
அவற்றை தொல்லியல்துறை 2009 மற்றும் 2010 ல் இப்பகுதிகளில் ஆய்வு செய்ததில் இதுதெரிந்தது.அதில் பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் கிடைத்தன. பாசி மணிகள், சிவப்பு, கருப்பு பானை ஓடுகள், சுடுமண் மணிகள், மண் குவளைகள், செங்கற்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இப்பகுதியின் அகழ்வாராய்ச்சியின் போது வாழ்விட பகுதி, இடுகாட்டுப் பகுதி என பிரித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது.
நூற்றுக்கணக்கான கல்திட்டைகள் இப்பகுதியில் உள்ளன. அதில் நான்கு கல்திட்டைகள் மட்டுமே ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இப்பகுதியில் தமிழரின் தொன்மையை விளக்கும் பொருட்கள் ஆயிரக்கணக்கில் கிடைத்தன. மேலும் மணிகள் செய்யக்கூடிய தொழில் கூடமும் இருந்த அடையாளமும் உள்ளது.நான்கு கால்களை உடைய மண்சாடிகள், பானைகள், இரும்பு வாள், கத்தி, சங்ககால செப்புக்காசுகள், தந்தத்தால் ஆன தாயக்கட்டை, சுடுமண்ணால் செய்யப்பட்ட பெண்களின் முகம், மனித உருவம், சதுரங்க கட்டை, எடை கட்டைகள் என பலவற்றையும் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்
குறிப்பாக கி.மு., 490 ஆம் ஆண்டைச் சேர்ந்த நெல்மணிகள் கிடைத்தன. சிகாகோ பல்கலைக்கழகத்தில் கார்பன் 14 கதிரியக்க முறையை பயன்படுத்தி இதன் வயதை கண்டறிந்தனர். இதன்மூலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விவசாயத்தில் இப்பகுதி சிறந்து விளங்கியது தெளிவாகிறது. இந்த நெல்மணிகள் வைக்கப்பட்ட பானையில் வ. ய். ர எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இவை பழமையான 'தமிழி' எழுத்து வடிவங்கள். அதன் தொன்மையை உணர்த்தும் விதமாக உள்ளது.இப்பகுதியில் கிடைத்த பொருட்கள் சென்னை தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
சில பொருட்கள் பழநி அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது. நான்கு கால்களை உடைய பானைகள், தங்கத்தாலான தாயக் கட்டைகள் அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டது. இங்குள்ள புதைகுழிகள் வட்ட, செவ்வக வடிவில் உள்ளன.தமிழரின் வரலாற்று சிறப்புமிக்க வாழ்வியல் முறையை விளக்கும் தொன்மையான அடையாளங்கள் கீழடியில் மட்டுமில்லாமல், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அமைதியாக பெருமையோடு மண்ணில் புதைந்துள்ளன.
தொல்லியல் ஆய்வாளர் நந்திவர்மன் கூறுகையில், "பொருந்தல் பகுதியில் பல கல்திட்டைகள் இன்னும் ஆய்வு செய்யவேண்டிய நிலையில் உள்ளன. அவை அழிந்து, தொன்மையை இழந்து வருகின்றன. இதேபோல் இரவிமங்கலம் பகுதியில் நடுகற்கள் பல உள்ளன. இவற்றை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய முன்வர வேண்டும்" என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE