நம் தமிழ் பாரம்பரியத்தில் பல வள்ளல்கள் நிரம்பிஇருக்கின்றனர். அந்த வள்ளல்கள் எல்லாம் மன்னர்களாக இருந்து, அரசு சொத்தை தானம் செய்தவர்கள். எம்.ஜி.ஆர்., மட்டுமே சொந்தமாக உழைத்து சம்பாதித்த பணத்தையே, வாரி வாரி வழங்கியவர்.
அவரது வள்ளல் தன்மைக்கும், ஈர நெஞ்சத்திற்குமான சான்றுகளை அடுக்கினால், அதற்கு பல நுாறு புத்தகங்கள் போட வேண்டியிருக்கும். எனவே, ஒரு சில உதவிகளை மட்டும், அவரது பிறந்த நாளில் குறிப்பிட விரும்புகிறேன்.அண்ணாதுரையின் வெளிநாட்டு மருத்துவ செலவை எம்.ஜி.ஆர்., ஏற்றுக் கொண்டதை மக்கள் அறிவர்.
அதே அண்ணாதுரையின் பயணத்துக்காக, கார் வாங்கிக் கொடுத்தது எம்.ஜி.ஆர்., தான் என்பது யாருக்கும் தெரியாது. மேலும், அண்ணா சாலையில், அண்ணாதுரை சிலையை நிறுவுவதற்கான முழு செலவான 1 லட்சம் ரூபாயையும் ஏற்றுக் கொண்டவர் அவரே. கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவுக்கு சிலை அமைக்க நன்கொடை கேட்டு, பாலதண்டாயுதமும், தா.பாண்டியனும் எம்.ஜி.ஆரை சந்தித்தனர். அவர்களுக்கு சிறந்த விருந்தோம்பல் வழங்கியதுடன், ஜீவா சிலை அமைப்பதற்கான மொத்தச் செலவையும் ஏற்று, ஆனந்த அதிர்ச்சி கொடுத்தார்.
திரையுலகில் எம்.ஜி.ஆரால் மிகவும் மதிக்கப்பட்டவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவரின் வீடு ஏலத்துக்கு வந்த செய்தி அறிந்ததும், உடனே 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து வீட்டை மீட்டுக் கொடுத்தார். என்.எஸ்.கிருஷ்ணன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நேரத்தில், அவரை பார்க்க சென்றார். என்.எஸ்.கிருஷ்ணன் துாங்கிக் கொண்டிருக்கவே, அவரை தொந்தரவு செய்யாமல் கிளம்பிப் போய்விட்டார். அதன் பிறகு தான், தலையணைக்கு கீழே எம்.ஜி.ஆர்., பணத்தை வைத்துவிட்டு போயிருக்கிறார் என்று தெரியவந்து, அத்தனை பேரும் ஆச்சர்யமாகினர்.
தத்துவ பாடல்கள்
என்.எஸ்.கிருஷ்ணன் மறைவுக்கு பின், அவரது மகள் வடிவுக்கு, நிச்சயம் முதல் திருமணம் வரையிலான அனைத்து செலவுகளையும் முன்னின்று செய்து வைத்தவர் இந்த கலியுக வள்ளல் எம்.ஜி.ஆர்., தான். 'என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவற்றாலானவை என்று எனக்கு தெரியாது. ஆனால், நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களால் ஆனது' என்று கூறியவர் எம்.ஜி.ஆர்.,அந்த அளவுக்கு புரட்சிகரமான தத்துவ பாடல்களை எழுதி, எம்.ஜி.ஆருக்கு பெயரும், பெருமையும் வாங்கிக் கொடுத்தவர், கல்யாண சுந்தரம். அவருக்கான அத்தனை மருத்துவச் செலவுகளையும் எம்.ஜி.ஆரே ஏற்றுக்கொண்டார்.
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மரணத்தை தழுவியதும், நாடோடி மன்னன் படத்தின் பாடல்கள் வாயிலாக கிடைத்த அத்தனை வருமானத்தையும், அவரின் குடும்பத்துக்கே கொடுத்தார். மேலும், பட்டுக்கோட்டையாரின் மகன் படித்து முடித்ததும், அவருக்கு அரசு வேலை கொடுத்ததும் எம்.ஜி.ஆர்., தான்.
எங்கள் தங்கம் திரைப்படத்திற்கு ஊதியமே வாங்காமல் நடித்துக் கொடுத்து, முரசொலி மாறனின் சொத்துக்கள் ஏலத்துக்கு போகாமல் காப்பாற்றிக் கொடுத்ததும் இந்த தலைவர் தான். தமிழ் திரையுலகில், ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்த ஸ்ரீதர், ஒரு கட்டத்தில் பெரும் கடனாளியாகி விட்டார். அனைவரும் கைவிட்ட நிலையில், எம்.ஜி.ஆரை சந்திப்பது மட்டும் தான் தீர்வு என்று சொல்லப்பட்டது.
சிவந்த மண் படம் எடுத்த நேரத்தில் ஏற்பட்ட மனஸ்தாபத்தில், 'இது, எம்.ஜி.ஆரின் சிவந்த மண் அல்ல; ஸ்ரீதரின் சிவந்த மண் என்று ஆணவமாக பேசிவிட்டேன், இப்போது எப்படி அவரிடம் செல்வேன்' என்று தயங்கினார்.ஆனாலும், 'தலைவர் எதையும் மனதில் வைத்துக்கொள்ள மாட்டார்' என்று சின்னப்ப தேவர் சொன்னதை நம்பி, ஸ்ரீதர் உதவி கேட்க சென்றார். ஸ்ரீதரை கண்டதும் வரவேற்று சாப்பிட வைத்த எம்.ஜி.ஆர்., 'பழைய சம்பவங்களை நான் அப்போதே மறந்து விட்டேன்' என்று சொல்லி, புதிய படத்திற்கு பூஜை போடச் சொன்னார். எம்.ஜி.ஆர்., நடிப்பில், உரிமைக்குரல் படத்திற்கு ஸ்ரீதர் பூஜை போட்டதுமே, படம் தயாரிக்க தேவையான பணம் வந்தது மட்டுமின்றி, மொத்த கடனில் இருந்தும் மீண்டார்.
சொந்தப்படம் எடுக்க நடிகர் தேங்காய் சீனிவாசன் முயன்ற போது, அவரை எம்.ஜி.ஆர்., எச்சரிக்கை செய்தார்.
ரூ. 90 ஆயிரம்
ஒரு கட்டத்தில் பெரும் சிக்கலில் மாட்டிய சீனிவாசன், எம்.ஜி.ஆரை சந்தித்து உதவி கேட்க, 'நான் சொன்னதை நீ கேட்கவில்லை; கெட்டால் தான் புத்தி வரும் போ' என்று விரட்டியடித்தார். தெய்வமே தன்னை கைவிட்டு விட்டதாக அழுது புலம்பியபடி வீட்டுக்குச் சென்றார் தேங்காய் சீனிவாசன். அங்கே அவரது மனைவி ஒரு கையில் சூட்கேஸுடன், 'எம்.ஜி.ஆர்., 25 லட்சம் ரூபாய் கொடுத்து அனுப்பிஇருக்கிறார்' என்று சொன்னார். வாய் திட்டினாலும் கை கொடுக்கும் என்பது தான் எம்.ஜி.ஆரின் மனிதநேயம்.
தயாரிப்பாளரும், இயக்குனருமான பி.ஆர்.பந்துலுவின் கடன் பிரச்னையை அறிந்தவுடன், புதிய படத்தில் நடிப்பதற்கான கால்ஷீட் கொடுத்தார். அந்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன். அதுதான், பந்துலுவின் அத்தனை கடன் பிரச்னைகளையும் தீர்த்து வைத்தது.தன் மகளின் திருமணத்தை நிச்சயம் செய்த நகைச்சுவை நடிகர் வீரப்பனுக்கு, பணம் தருவதாக சொன்னவர்கள் கைவிட்டனர். வேறு வழியே இல்லாமல், அதிக அறிமுகம் இல்லாத எம்.ஜி.ஆரை தயக்கத்துடன் சந்தித்தார். திருமண பத்திரிகையையும், அவரது நிலையை பார்த்ததுமே எம்.ஜி.ஆர்., புரிந்து கொண்டு, ஒரு பழைய செய்தித்தாளில் பணத்தை கட்டிக்கொடுத்து அனுப்பி வைத்தார். அதில், 90 ஆயிரம் ரூபாய் இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார் வீரப்பன். திருமணத்துக்கான மொத்த செலவை விட அது அதிகம்.
ஒரு கோவில் கும்பாபிஷேகத்திற்காக கிருபானந்த வாரியார் நிதி திரட்டுவதை அறிந்த எம்.ஜி.ஆர்., 'நீங்கள் யாரிடமும் போய் கையேந்த வேண்டாம்' என்று, 'பிளாங்க் செக்' கொடுத்து மலைக்க வைத்தார். கடந்த 1959ல், 'எம்.ஜி.ஆர். அறநிலையக் குழு' ஒன்றை உருவாக்கி, அதற்கு 3 லட்சம் ரூபாயை தன் சொந்த நிதியிலிருந்து கொடுத்தார். இந்த அறநிலையக் குழு வாயிலாக கோடம்பாக்கத்தில், 'எம்.ஜி.ஆர்., தொடக்கப்பள்ளி' ஆரம்பிக்கப்பட்டு, 500 ஏழை குழந்தைகள் இலவசமாக கல்வி பயின்றனர். 'எம்.ஜி.ஆர். இலவச நுால் நிலையமும்' துவங்கப்பட்டது.
கோடம்பாக்கம் - ஆற்காடு சாலையில், எம்.ஜி.ஆரின் தாய் சத்தியபாமா பெயரில் உள்ள சத்யா தோட்டத்தில், இலவச மருத்துவமனையை, 20 ஆயிரம் ரூபாயில் 1960ம் ஆண்டு நிறுவினார். இங்கு பணியாற்றிய டாக்டர்கள், நர்ஸ்கள், ஆயாக்களுக்காக மருத்துவமனைக்கு அருகிலேயே வீடுகள் கட்டித் தரப்பட்டன.
நிவாரண தொகை
இன்றைய தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அன்றைய காலகட்டத்தில், 4 கிரவுண்ட் நிலத்தை தன் சொந்த நிதியிலிருந்து வாங்கிக் கொடுத்தார்; சீனா படையெடுப்பு,பாகிஸ்தான் படையெடுப்பின் போதும் மிகப்பெரும் தொகையை நிவாரண நிதிக்கு கொடுத்தார்.தனுஷ்கோடி புயல் நிவாரணத்துக்கும், சென்னை, திருச்சி வெள்ளத்திற்கும், கமலா சர்க்கஸ் தீ விபத்துக்கும், சென்னை தீ விபத்துக்கும், கிருஷ்ணாம்பேட்டை தீ விபத்துக்கும், புதுப்பேட்டை தீ விபத்துக்கும், மதுரை சரஸ்வதி பள்ளி தீ விபத்தில் மாண்ட மாணவியர் குடும்பத்திற்கும், கொய்னா நில நடுக்கத்திற்கும் தன் சொந்த நிதியிலிருந்து நிவாரண தொகைகளை வழங்கினார்.
கடலில் ஒரு துளி தான்
பெருந்தலைவர் காமராஜரின் சகோதரி, கக்கனின் மனைவி சொர்ணம் பார்வதி, வாஞ்சிநாதனின் சகோதரர் கோபாலகிருஷ்ணன், வி.சீனிவாசராவின் மனைவி நாச்சாரம்மாள், திருப்பூர் குமரனின் மனைவி ராமாயி அம்மாள், ஜீவாவின் மனைவி பத்மாவதி, மகன் மணிகுமார். பாரதியின் பேத்தி சேதுலட்சுமி, மருதுபாண்டியரின் வாரிசுகள் என, தேசத்துக்கு பாடுபட்டவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவியும், அரசு ஓய்வூதியமும் வழங்கி கவுரவித்தார்.
அவ்வை இல்லம், சென்னை, ஆந்திர மகிள சபா, ஈஸ்வரபிரசாத் அங்கஹீன குழந்தை பராமரிப்பு நிதி, பார்வை இழந்தோருக்கு அறுவை சிகிச்சை நலநிதி, பெங்களூரு அனாதை பள்ளிக்கு நிதி என்று உதவி தேவைப்படுபவர்களை தேடிப் போய் கொடுத்தார். டில்லி தமிழ் சங்கம், மும்பை தமிழ் சங்கம், கல்கத்தா தமிழ் சங்கத்திற்கும் பெரிய அளவில் நிதி உதவி செய்தவர் எம்.ஜி.ஆர்., தான் சம்பாதித்த அத்தனை பணத்தையும், வாங்கிய சொத்துக்களையும் அள்ளிக்கொடுத்தவர் அவர் மட்டுமே.
முதல்வர் பதவிக்கு வந்த பிறகு, எம்.ஜி.ஆர்., ஒரு சொத்து கூட வாங்கியதில்லை என்பதிலிருந்தே, அவர் மக்களுக்காக எத்தனை நேர்மையுடன் செயல்பட்டார் என்பதை உணர முடியும். அவருடைய சொத்துக்களையும் ஏழைகளுக்கு எழுதி வைத்தார். சமூகத்தில் பிரபலமாக இருந்தவர்களுக்கு, எம்.ஜி.ஆர்., செய்த உதவிகளில் ஒரு சிலவற்றை மட்டுமே இங்கே கூறியிருக்கிறேன். இவை கடலில் ஒரு துளி தான்.
ஐ.ஏ.எஸ்., அறக்கட்டளை
அறிமுகம் இல்லாதவர்களுக்கும், ஏழைகளுக்கும் வாழும் நாள் முழுவதும் அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருந்த வள்ளல் அவதாரம் தான் அவர். அவர் காட்டிய வழியில், தேவைப்படுவோரின் தேவையறிந்து உதவி செய்யும் வகையில், என் சொந்த பணத்தில் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ்., அறக்கட்டளையை நடத்தி வருகிறேன். என்னை போலவே உலகம் முழுவதுமுள்ள எம்.ஜி.ஆர்., பக்தர்கள் ஒவ்வொருவரும், எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், அவர்களால் முடிந்த அளவுக்கு மக்கள் சேவை செய்து வருகின்றனர்.
தன் வாழ்க்கை மூலமும், திரைப்படங்கள் வாயிலாகவும், மக்களிடம் மனிதநேய சிந்தனையை ஊக்குவித்த காரணத்தாலேயே, எம்.ஜி.ஆரை, 'வள்ளல்களுக்கு எல்லாம் வள்ளல்' என்று மக்கள் இன்றும் போற்றி மகிழ்கின்றனர்; உலகம் உள்ள வரையிலும் போற்றி மகிழ்வர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE