நத்தம் ; நத்தம் சுற்றுவட்டார பகுதியில் மாம்பழ சீசன் நெருங்குவதால் விவசாயிகள் மரங்களுக்கு முதல் சுற்று பூச்சி மருந்து தெளிக்கும் வேலையை தொடங்கியுள்ளனர்.
நத்தம் சுற்றுவட்டார கிராமங்களில் பிரதான தொழிலாக இருப்பது விவசாயம். இப்பகுதி விவசாயிகளில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மா விவசாயமே செய்கின்றனர். மா மரங்களை குன்றுகள் மற்றும் மலைகளில் நட்டு வளர்ப்பது எளிதாக இருப்பதோடு, மானாவாரி முறையில் வளர்ப்பதே காரணம்.இதனால் நத்தம் தாலுகாவில் 7,080 எக்டேர் பரப்பிலும், சாணார்பட்டி தாலுகாவில் 5,004 எக்டேர் பரப்பிலும் மா சாகுபடி நடக்கிறது. மா மரங்கள் சீசன் மற்றும் கோடை என ஆண்டுக்கு 2 முறை பலன் தருகிறது.
வரும் ஏப்ரல், மேயில் சீசன் விளைச்சல் தொடங்கும். அதற்கு இப்போதே விவசாயிகள் மரங்களை கவாத்து செய்வது, மரத்தின் தூரில் உரம், சத்தான செடிகளை இடுவது போன்ற பணிகளை செய்கின்றனர். மேலும் மரங்களில் முதல் சுற்று பூச்சி மருந்து தெளிக்கும் பணியிலும் மும்முரமாக உள்ளனர்.அதிகபட்சம் 4 சுற்று வரை பூச்சி மருந்து தெளிக்கின்றனர். இதனால் பூப்பது முதல், பூக்கள் கருகாமல், பிஞ்சு உதிராமல், காய் பருப்பதற்கு என மருந்து தெளிப்பு உதவுகிறது.
மா விவசாயி ஒருவர் கூறியதாவது: பத்தாண்டுக்கு முன் ஒன்று அல்லது 2 முறையே பூச்சி மருந்து தெளித்தோம். பெரும்பாலும் இயற்கை விவசாயமே நடந்தது. தற்போது 4 முறைக்கு மேல் தெளிக்க வேண்டியுள்ளது. இதனால் செலவினம் கூடுகிறது. பக்கத்து தோட்டத்தில் தெளித்தால், நாமும் தெளித்தே ஆக வேண்டியுள்ளது. இல்லையெனில் அங்குள்ள பூச்சிகள் இங்கு வந்துவிடும்.விளைச்சலை அதிகப்படுத்த, எல்லா நேரமும் தொடர்ந்து காய் காய்க்க அதிக ரசாயன மருந்துகளை சில விவசாயிகள் தெளிக்கின்றனர். இதை தவிர்த்து, இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும், என்றார்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE