பண்ருட்டி-செவிலியர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பள்ளி தாளாளர் உட்பட இருவரை 'போக்சோ'வில் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டியில் ஜெ.என்.எஸ்., என்ற செவிலியர் பயிற்சி பள்ளியை, டேவிட் அசோக்குமார், 39, என்பவர் நடத்தி வருகிறார். இங்கு படிக்கும் பயிற்சி மாணவியர் மூவரை, டேவிட் அசோக்குமார், செவிலியர் பள்ளி ஆசிரியர்கள் நிஷா, 32, அன்பழகன், 32; பிரேம்குமார், 39 ஆகிய நால்வரும், கடந்த டிசம்பர் 4ம் தேதி 'கேம்ப்' என கூறி ஏற்காடு அழைத்து சென்றனர். ஏற்காட்டில் ரூம் எடுத்து தங்கினர்.
அங்கு மாணவியருக்கு மது வழங்கி, டேவிட் அசோக்குமார், அன்பழகன், பிரேம்குமார் ஆகியோர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். மீண்டும் கடந்த 2ம் தேதி கேம்ப் எனக் கூறி கட்டாயம் வர வேண்டும் என அழைத்தனர்.இதில் மனமுடைந்த 17 வயது மாணவி, கடந்த 12ம் தேதி பண்ருட்டி ரயில்வே மேம்பாலத்தில் இருந்து தற்கொலை செய்து கொள்ள குதித்தார். பலத்த காயமடைந்த அவர், கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மாணவி கொடுத்த புகாரில், பண்ருட்டி மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து நிஷா, அன்பழகன் ஆகியோரை கடந்த 13ம் தேதி கைது செய்தனர். தேடப்பட்ட பயிற்சி பள்ளி தாளாளர் டேவிட் அசோக்குமார், பயிற்சி ஆசிரியர் பிரேம்குமார் ஆகியோரை நேற்று மகளிர் போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE