வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தளவாய்புரம்--ராஜபாளையம் அருகே சேத்துாரை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட அம்மாவை, அவரது மகள் தாயை போன்று கவனித்து வருவது கல்நெஞ்சம் கொண்டோரையும் கண்கலங்க வைக்கிறது.
தந்தை கைவிட்ட நிலையில், படிக்கும் வயதில் சிறுவன் கட்டட பணிக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுகிறார்.விருதுநகர் மாவட்டம் சேத்துாரை சேர்ந்தவர் குரு பாக்கியம் 38. தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த கட்டட தொழிலாளி கனகராஜ் உடன், 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
2 குழந்தைகள் பிறந்த நிலையில், குரு பாக்கியத்துக்கு ஏற்பட்ட வலிப்பு நோயால் கணவர் பிரிந்து சென்றுவிட்டார். கணவர்பிரிந்து சென்றதால் குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு சென்ற நிலையில், நோய் பாதிப்பால் தொடர்ச்சியாக வேலைக்கு செல்ல முடியவில்லை. 2021 டிச.,ல் சமையல் செய்த போது வலிப்பு வர, கொதிக்கும் எண்ணெய் கொட்டியதில் குரு பாக்கியத்தின் முகம் உடலின் ஒரு பகுதி காயம் ஏற்பட்டது. இதனால் கையை நீட்டவும் ,மடக்கவும் முடியாமல் போக மனநலம் பாதிப்புக்கு ஆளானார்.
இதனால் வருமானமின்றி குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. வீடு வாடகை ரூ.400, வைத்திய செலவு ஏற்பட உணவுக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து பத்தாம் வகுப்பு படித்து வந்த மகன் சுரேஷ் குடும்பத்தை காப்பாற்ற கட்டட வேலைக்கு செல்கிறார்.
வீட்டின் சமையல் துணி துவைப்பது உள்ளிட்ட பணிகளை 8 வயது மகளான மகாலட்சுமி செய்து வருகிறார். இவர் ஒரு தாயை போன்று தனது அம்மாக்கு உணவு ஊட்டல் என அனைத்து பணிகளையும் செய்வது பார்ப்பபோரை கண்கலங்க வைக்கிறது. இவர்களுக்கு ரேஷன்கார்டு இல்லாததால் அரசு உதவியும் பெறமுடியாது தவிக்கின்றனர்.
ராஜபாளையம் தாசில்தார்ராமச்சந்திரன்: குரு பாக்கியம் குடும்பத்தினரின் ஆதரவற்ற நிலை அறிந்து அரசு உதவிகள் பெற்றுத்தர ஏற்பாடுகள் செய்யப்படும், என்றார்.
இதனிடையே இக்குடும்பத்தாரின் நிலையை அறிந்த விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி, தனது டுவிட்டரில் 'குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். இன்று குடும்பத்தாரை சந்தித்து தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE