புதுடில்லி-கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது.
இந்த ஒரு ஆண்டில், 157 கோடிக்கும் அதிகமான 'டோஸ்' தடுப்பூசிகள் போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.'கோவிஷீல்டு' மற்றும் 'கோவாக்சின்' கொரோனா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, தடுப்பூசி போடும் பணியை கடந்த ஆண்டு ஜனவரி 16ல் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். துவக்கத்தில் மருத்துவ பணியாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்., 2 முதல், முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டன. மார்ச் 1 முதல், 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி விரிவுபடுத்தப்பட்டன.மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள துவங்கியதை அடுத்து, கடந்த ஆண்டு ஏப்., 1 முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என அறிவிக்கப்பட்டது.
இது, மே 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமாக விரிவுபடுத்தப்பட்டது. துவக்கத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்களுக்கு தயக்கம் இருந்தது. 'தடுப்பூசி மட்டுமே கொரோனாவை வெல்லும் பேராயுதம்' என மத்திய அரசு தொடர்ந்து பிரசாரம் செய்ததன் பலனாக, மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்க துவங்கின.கடந்த ஆண்டு ஏப்., 1ல் தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 10 கோடியை எட்டியது.
இது, கடந்த ஆண்டு அக்., 21ல் 100 கோடி டோஸ் என்ற இலக்கை கடந்தது. தடுப்பூசி பணிகள் துவங்கிய ஒன்பது மாதங்களுக்குள் 100 கோடி டோஸ் இலக்கை எட்டியது, உலக அளவில் மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.கடந்த 7ம் தேதி தடுப்பூசி டோஸ் எண்ணிக்கை 150 கோடியை கடந்தது. இதுவரை 157 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.நாடு முழுதும் 18 வயதை கடந்த 93 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 69.8 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, 15 - 18 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி சமீபத்தில் துவங்கின. சிறார்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொள்வதை அடுத்து, 3.38 கோடிக்கும் அதிகமான டோஸ் சிறார்களுக்கு போடப்பட்டுள்ளன.இணை நோய்கள் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, 'முன்னெச்சரிக்கை டோஸ்' எனப்படும் மூன்றாவது டோஸ் போடும் பணி துவங்கி உள்ளது. ஒரு வாரத்தில் 43.19 லட்சம் முன்னெச்சரிக்கை டோஸ்கள் போடப்பட்டுள்ளன.தடுப்பூசி பணிகள் துவங்கி ஓராண்டு நிறைவடைந்ததன் நினைவாக தபால் தலை நேற்று வெளியிடப்பட்டது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக தபால் தலையை வெளியிட்டார்.அப்போது அவர் பேசியதாவது:உள்நாட்டிலேயே தடுப்பூசி தயாரிப்பது தொடர்பான ஆய்வுக்கு பிரதமர் மோடி மிகப் பெரிய ஊக்கம் அளித்தார். தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் அளித்தார்.
அரசு மற்றும் தனியார் துறையினர் துரிதமாக செயல்பட்டு, ஒன்பது மாதங்களுக்குள் தடுப்பூசியை அளித்தனர். அதன் அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதல் அளிக்கும் நடைமுறைகளை மத்திய அரசு எளிதாக்கியது.தடுப்பூசி பணியில் குழப்பம் விளைவிக்க சிலர் முயன்றனர். விஞ்ஞானிகளுக்கும், நிறுவனங்களுக்கும் பிரதமர் அளித்து வந்த தொடர் ஊக்கம் மற்றும் ஒத்துழைப்பால், அந்த சதிகள் முறியடிக்கப்பட்டன. தடுப்பூசி போடும் பணியில் நாம் செய்துள்ள சாதனையை பார்த்து உலகமே வியக்கிறது. இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது.இவ்வாறு அவர் பேசினார்.
மோடியே காரணம்!நாடு முழுதும் போடப்பட்டுள்ள 157 கோடி டோஸ்களில், 99 கோடி டோஸ்கள் கிராமப்புறங்களில் போடப்பட்டுள்ளன. 18 வயதை கடந்த 70 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர். மிகப் பெரிய மக்கள் தொகை உடைய நாட்டில், தடுப்பூசி போடும் பணி இத்தனை வேகமாக நடந்துள்ளது என்றால், பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையே அதற்கு காரணம். ஜே.பி.நட்டாதேசிய தலைவர், பா.ஜ.,எதையும் சாதிக்கலாம்!ஒரு பொதுவான நோக்கத்திற்காக அரசும், மக்களும் கைகோர்த்து உழைத்தால் எவ்வளவு கடுமையான இலக்குகளாக இருந்தாலும் அதை எளிதில் அடைந்துவிடலாம் என்பதற்கு நாம் மிகப் பெரிய உதாரணமாக விளங்குகிறோம்.
அமித் ஷாமத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,பிரதமர் வாழ்த்து!
தடுப்பூசி போடும் பணி ஓராண்டு நிறைவடைந்தது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தன் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:கொரோனா தொற்று பரவல் துவங்கியபோது, அந்த கொடூர வைரஸ் குறித்து யாருக்கும் எதுவும் தெரியவில்லை. நம் விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தினர். அதன் பலனை இன்றைக்கு நாம் அனுபவிக்கிறோம். தடுப்பூசி பணியில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் என் வணக்கம்.
இந்த பணியை வெற்றியடையச் செய்த டாக்டர்கள், மருத்துவ மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் சேவை மகத்தானது. நாட்டின் எங்கோ ஒரு மூலையில் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் தகவலை அறியும் போது, நம் மனம் பெருமையால் நிறைகிறது.இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE