வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-உத்தர பிரதேசத்தில் ஓ.பி.சி., மற்றும் எஸ்.சி., வகுப்பினரின் ஆதரவை தக்க வைப்பதற்காக முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கின் யுக்தியை பின்பற்ற, பா.ஜ., மேலிடம் வியூகம் வகுத்துள்ளது.
![]()
|
முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கும் உ.பி.,யில் சட்டசபை தேர்தல் ஏழு கட்டமாக நடக்க உள்ளது. இதையடுத்து மாநிலத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. கடந்த முறை அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய பா.ஜ., இம்முறை ஆட்சியை தக்க வைக்க கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின், யோகி ஆதித்யநாத் அரசின் அமைச்சர்களாக இருந்த மூவர் மற்றும் ஆறு எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ., விலிருந்து விலகினர். அமோக ஆதரவுபா.ஜ., கடந்த முறை வெற்றி பெற்றதற்கு, ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்.சி., வகுப்பினர் அளித்த அமோக ஆதரவு தான் முக்கிய காரணம். பா.ஜ.,விலிருந்து சமீபத்தில் விலகிய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் ஓ.பி.சி., பிரிவைச் சேர்ந்தவர்கள்.
அதனால் பா.ஜ.,வுக்கு இம்முறை ஓ.பி.சி., வகுப்பினர் ஆதரவு கிடைக்காது என்ற பேச்சு எழுந்துள்ளது.இதையடுத்து ஓ.பி.சி., - எஸ்.சி., பிரிவினர் ஆதரவை தக்க வைக்க, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் யுக்தியை பின்பற்ற பா.ஜ., முடிவு செய்துள்ளது.உ.பி.,யில் 1991ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஓ.பி.சி., - எஸ்.சி., பிரிவினருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வேட்பாளர்களை பா.ஜ., தேர்வு செய்தது. தேர்தலில், பா.ஜ., முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. கல்யாண் சிங் முதல்வரானார்.கடந்த 2014 லோக்சபா தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வில் இந்த பிரிவினருக்கு பா.ஜ.,வின் அப்போதைய தலைவர் அமித் ஷா முக்கியத்துவம் அளித்தார். இதிலும் பா.ஜ., அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து தற்போதைய தேர்தலிலும் அதே வியூகத்தை பின்பற்ற பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது.பா.ஜ., அறிவித்துள்ள முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் 44 பேர் ஓ.பி.சி.,யையும், 19 பேர் எஸ்.சி., பிரிவையும் சேர்ந்தவர்கள்.அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியலிலும் இதே வியூகத்தை பின்பற்றி ஆட்சியை பிடிக்க பா.ஜ., முடிவு செய்துள்ளது.
இந்த வியூகத்துக்கு வெற்றி கிடைக்குமா என்பது ஓட்டு எண்ணிக்கையின் போது தெரிந்து விடும். கட்சி தாவல்முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசில் அமைச்சராக இருந்து சமீபத்தில் விலகிய தாரா சிங் சவுகான், சமாஜ்வாதி கட்சியில் நேற்று இணைந்தார். ஏற்கனவே யோகி அரசில் அமைச்சர்களாக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி ஆகியோர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்த நிலையில் தற்போது தாரா சிங்கும் இணைந்துள்ளார். பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான அப்னா தளத்தை சேர்ந்த எம்.எல்.ஏ., சவுத்ரி அமர் சிங்கும், சமாஜ்வாதியில் இணைந்தார். முன்னாள் அமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.,வுமான ராம்வீர் உபாத்யாய், பா.ஜ.,வில் நேற்று இணைந்தார். கான்பூர் போலீஸ் கமிஷனராக பணியாற்றிய ஆசிம் அருண் கடந்த மாதம் ஓய்வு பெற்றார்; பா.ஜ.,வில் அவர் நேற்று இணைந்தார். இதற்கிடையே உ.பி.,யில் பா.ஜ., கூட்டணியில் போட்டியிடும் நிஷாந்த் கட்சிக்கு, 15 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் மீது தாக்கு
உ.பி., சட்டசபை தேர்தலில் ஹஸ்தினாபூர் தொகுதியில் நடிகை அர்ச்சனா கவுதமை வேட்பாளராக அறிவித்துள்ளது, காங்கிரஸ் மேலிடம். இதற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.பா.ஜ., செய்தி தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி கூறியதாவது:உ.பி.,யில் போட்டியிட காங்கிரசிடம் தகுதியான வேட்பாளர்கள் இல்லை. அதனால் தான் நடிகைக்கு வாய்ப்பு வழங்கி, மலிவான விளம்பரத்தை தேடுகிறது.இவ்வாறு அவர் கூறினார். ஆம் ஆத்மி வாக்குறுதிமுதல்வர் பிரமோத் சவந்த் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கும் கோவாவில் அடுத்த மாதம் 14ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
![]()
|
இதையொட்டி கோவா தலைநகர் பணஜிக்கு நேற்று வந்த ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:கோவாவில் ஆம் ஆத்மி ஆட்சியமைத்தால், வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். கோவா மக்களுக்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம், தண்ணீர் வழங்கப்படும்.நாட்டில் தற்போதுள்ள கட்சிகளில் மிகவும் நேர்மையான கட்சி ஆம் ஆத்மி மட்டும் தான். இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் சகோதரர் சுயேச்சையாக போட்டிபஞ்சாபில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. முதல்வரும், காங்கிரஸ் முக்கிய தலைவருமான சரண்ஜித் சிங்கின் சகோதரர் மனோகர் சிங், பஸ்ஸி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் மேலிடத்திடம் 'சீட்' கேட்டிருந்தார். அந்த தொகுதி அவருக்கு ஒதுக்கப்படாததால், சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE