இந்திய நிகழ்வுகள்
பெண் மீது டாக்டர் தாக்குதல்
போபால்: மத்திய பிரதேசத்தின் இந்துாரில் மகன் ராஜுவுடன் காய்கறி விற்கும் துவாரகா பாய், தள்ளுவண்டி முன் நின்ற காரை எடுக்கும்படி அதிலிருந்த டாக்டரிடம் கூறினார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தன் மருத்துவமனை ஊழியர்களுடன் வந்த டாக்டர், அந்த பெண் மற்றும் அவரது மகனை சரமாரியாக தாக்கி வண்டியை கவிழ்த்தார். காய்கறிகள் சாலையில் சிதறின. இந்த 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
![]()
|
லஞ்சம் வாங்கிய 'கெயில்' இயக்குனர் கைது
புதுடில்லி-பிரபல நிறுவனங்களிடம் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, 'கெயில்' என்ற அரசு பொதுத் துறை நிறுவனத்தின் இயக்குனர் கைது செய்யப்பட்டுஉள்ளார்.
சி.பி.ஐ., விரித்த வலையில் இவர் வசமாக சிக்கினார்.'காஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட்' என்ற கெயில் நிறுவனம் இயற்கை எரிவாயுவை பதப்படுத்தி, வினியோகம் செய்கிறது. இயற்கை எரிவாயு, திரவ நிலை ஹைட்ரோகார்பன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறையில் ஈடுபட்டுள்ள கெயில் நிறுவனம், பெட்ரோ கெமிக்கல் பொருட்களையும் விற்பனை செய்கிறது.
தலைநகர் டில்லியில் கெயில் நிறுவனத்தின் பெட்ரோகெமிக்கல் பிரிவு தொடர்ச்சி 7ம் பக்கம்லஞ்சம் வாங்கிய... 3ம் பக்கத் தொடர்ச்சிஅமைந்துள்ளது. பிளாஸ்டிக், டயர், ரப்பர் போன்ற பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் வாங்கும் நிறுவனங்களுக்கு விலையில் சில தள்ளுபடி வழங்கப்படுகிறது.தகுதியுள்ள நிறுவனங்களுக்கு மட்டுமே இது வழங்கப்படும். இந்நிலையில் தகுதியில்லாத நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெற்று தள்ளுபடி வழங்கப்படுவதாக புகார் எழுந்தது.கெயில் பெட்ரோகெமிக்கல் பிரிவின் இயக்குனராக பணியாற்றும் இ.எஸ். ரங்கநாதன், லஞ்சம் வாங்குவதாக சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சி.பி.ஐ., அதிகாரிகள் அவரை கண்காணித்து வந்தனர். இதன்படி சி.பி.ஐ., அதிகாரிகள் விரித்த வலையில் ரங்கநாதன் வசமாக சிக்கினார். 50 லட்சம் ரூபாய்க்கும் மேல் லஞ்சம் வாங்கியதாக ரங்கநாதன் கைது செய்யப்பட்டார்.அவருடன், இரண்டு இடைத் தரகர்கள், இரண்டு தொழிலதிபர்களும் கைது செய்யப்பட்டனர். அவருக்கு உதவிய அலுவலக ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.ரங்கநாதன் வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 1.29 கோடி ரொக்கம் உட்பட 2.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இது குறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியுள்ளதாவது:டில்லியில் 'ரிஷப் பாலிகெம் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தை நடத்தும் ராஜேஷ் குமார், தள்ளுபடி சலுகையைப் பெறுவதற்கு பவன் கவுர் என்ற இடைத் தரகரை அணுகினார்.அவர்கள் இருவரும் கெயில் இயக்குனர் ரங்கநாதனை சந்தித்து பேசியுள்ளனர். அதற்கு ரங்கநாதன் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுபோன்ற சலுகைகளை வாங்கித் தருவதாக வேறு சில நிறுவனங்களிடம் ராஜேஷ் குமார் பேசியுள்ளார். அதன்பின் ராஜேஷ்குமார் மற்றும் பவன் கவுர் இருவரும் இதில் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர்.தள்ளுபடி சலுகை வழங்க 50 லட்சம் ரூபாய்க்கு மேல் பேரம் பேசப்பட்டு, அதில் ஒரு தொகை கைமாறியது. இந்தத் தகவல் கிடைத்ததும் சி.பி.ஐ., அதிகாரிகள் அவர்களை கண்காணித்தனர்.அப்போது சில தனியார் நிறுவனங்களிடம் இருந்து லஞ்சப் பணத்தை ராஜேஷ் குமார் மற்றும் பவன் கவுர் வாங்கியுள்ளனர்.
ரங்கநாதன் கூறியபடி அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ராமகிருஷ்ண நாயர் என்பவரிடம் பணத்தை ஒப்படைக்க முயன்றனர். அப்போது சி.பி.ஐ., அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர்.இந்த வழக்கில் ரங்கநாதன், அவருக்கு உதவிய ராமகிருஷ்ண நாயர், இடைத் தரகர்களாக செயல்ப்பட்ட பவன் கவுர், ராஜேஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தொழிலதிபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழக நிகழ்வுகள்
ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்தவர் கைது
விருதுநகர்--முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பண மோசடி புகார் கொடுத்த, அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலர் நேற்று கைது செய்யப்பட்டார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையைச் சேர்ந்தவர் விஜய நல்லதம்பி, 54; வெம்பக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க., முன்னாள் செயலர். ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று, 3 கோடி ரூபாயை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கொடுத்ததாக, மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
இதேபோல் சாத்துார் ரவீந்திரன், தன் உறவினருக்கு வேலை வாங்கி கொடுக்க பல தவணைகளில், 30 லட்சத்தை, விஜய நல்லதம்பியிடம் கொடுத்ததாக, போலீசில் புகார் செய்தார். இந்த புகார்கள் தொடர்பாக, ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் உள்ளார்.
இதற்கிடையில், மூன்று மாதங்களாக தலைமறைவாக இருந்த விஜய நல்லதம்பியை நேற்று துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புளியங்குளம் அருகே, விருதுநகர் தனிப்படை போலீசார் கைது செய்தனர். எஸ்.பி., மனோகர், டி.எஸ்.பி.,கண்ணன், இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் ஆகியோர் அவரிடம் விசாரிக்கின்றனர்.
மண் கடத்தல் லாரி பறிமுதல்
திருப்பூர்:ஊதியூர், வஞ்சிபாளையம் பிரிவு அருகே காங்கயம் தாசில்தார் சிவகாமி தலைமையிலான வருவாய்த்துறையினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.சந்தேகப்படும் விதமாக வந்த டிப்பர் லாரியை அதிகாரிகள் நிறுத்தினர். உடனே, டிரைவர்இறங்கி ஓடி விட்டார். அனுமதியில்லாமல், முறைகேடாக கிராவல் மண் எடுத்து வந்தது தெரிந்தது.மூன்று யூனிட் மண்ணுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டு தாலுகா வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊதியூர் போலீசார் தலைமறைவான டிரைவரை தேடி வருகின்றனர்.
களை கட்டிய சேவல் சண்டை: 33 பேர் கைது, கார் பறிமுதல்
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த, இரண்டு நாட்களாக சேவல் சண்டை நடப்பதாக போலீசார் பல்வேறு இடங்களை கண்காணித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குன்னத்துார், சின்னக்காட்டு வலசு, தாராபுரம், வீராச்சிமங்கலம், பொன்னாபுரம், அலங்கியம், சி.குமாரபாளையம், காங்கயம், சித்தம்பாளையம், மூலனுார், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக, 33 பேரை கைது செய்து, 26 சேவல், 2 லட்சத்து, 19 ஆயிரம் ரூபாய், ஏழு டூவீலர், ஐந்து கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காதலிக்கு உதை: காதலனிடம் விசாரணை
கொரட்டூர் : காதலியை சந்தேகித்து அடித்து உதைத்த காதலனை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.அம்பத்துார், பாடி, சி.டி.எச்., சாலை மேம்பாலம் அருகில் பிரபல ஜவுளிக்கடை உள்ளது.இங்கு, திருவண்ணாமலை மாவட்டம், கரும்பூந்தி பகுதியைச் சேர்ந்த சவேதா, 20, என்பவர், வேலை செய்து வருகிறார்.
இவர், தன்னுடன் கல்லுாரியில் ஒன்றாக படித்த திருவண்ணாமலை மாவட்டம், இரும்பூண்டி பகுதியைச் சேர்ந்த நவீன்குமார், 22, என்வரை காதலித்து வந்து உள்ளார்.இந்நிலையில், நேற்று நவீன்குமார் காதலிக்கு பொங்கல் வாழ்த்து கூற நேரில் சென்று உள்ளார்.அப்போது காதலியின் மொபைல்போனில் இருந்த குறுஞ்செய்தியை வாசித்துவிட்டு சந்தேகித்து, அவரை அடித்து உதைத்து உள்ளார்.இதுகுறித்த புகாரின்படி, கொரட்டூர் போலீசார் நவீன்குமாரை பிடித்து விசாரிக்கின்றனர்.
ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல்; கல்லூரி மாணவருக்கு போக்சோ
திண்டிவனம் : சென்னையை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லுாரி மாணவர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் மகன் திர்ஷாத், 21; சென்னையில் உள்ள கல்லுாரியில் எம்.எஸ்சி., முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர், ஊருக்கு வந்திருந்த சென்னையை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தைக்கு, கடந்த மாதம் 22ம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதுபற்றி தெரிந்த குழந்தையின் தாய், திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், திர்ஷாத் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து இன்ஸ்பெக்டர் பிரேமா விசாரித்து வருகிறார்.
![]()
|
சட்ட மாணவர் உட்பட மூவர் நீரில் மூழ்கி பலி:நு திண்டுக்கல்லில் சோகம்
திண்டுக்கல் -திண்டுக்கல் அருகே சட்டக்கல்லுாரி மாணவர் தங்கபாண்டி 21 மற்றும் 2 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி இறந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த் கருப்பன் மகன் தங்கபாண்டி. மதுரை சட்டக் கல்லுாரியில் முதலாண்டு படித்து வந்தார். நேற்றுவிடுமுறை நாளில் திண்டுக்கல்லில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.வாழைக்காய்பட்டி அருகே தடுப்பணையில் உறவினருடன் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக தங்கபாண்டி நீரில் மூழ்கினார். உறவினர்கள் காப்பாற்ற முயற்சித்தும் காப்பாற்ற முடியவில்லை.
தங்க பாண்டி நீரில் மூழ்கி பலியானார்.மற்றொரு சோகம்திண்டுக்கல் ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் மகன் ஹரீஷ் 15, பத்தாம் வகுப்பு படித்தார். வில்லியம் மகன் ரிச்சர்ட் 14. ஒன்பதாம் வகுப்பு படித்தார். இருவரும் அருகில் உள்ள குளத்தில் மீன்பிடிக்கச் சென்றனர். தண்ணீருக்குள் தவறி விழுந்த இருவரும் நீரில் மூழ்கி பலியாயினர். ஒரே நாளில் நிகழ்ந்த இச்சம்பவங்கள் திண்டுக்கல் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
பொங்கல் விழாவில் தகராறு; வாலிபர் கோலை
திருப்புவனம்--திருப்புவனம் அருகே, பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே இலந்தைகுளம் கிராமத்தில் பொங்கலை ஒட்டி, கார்த்திக் என்பவர் நேற்று முன்தினம் இரவு விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்தார். 'மைக்'கில் பேச்சுவிழாவில், சிவானந்தம், 24 என்பவர் வந்து மைக்கில் பேசியதை தட்டி கேட்டதை அடுத்து, தகராறு ஏற்பட்டு, அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்தனர். மீண்டும் இரவு கார்த்திக்குடன் சிவானந்தம் உட்பட ஐந்து பேர் தகராறு செய்துள்ளனர்.
அங்கு வந்த கருப்புசாமி, 23; அருண்குமார், 22 ஆகியோர், கார்த்திக்கிற்கு ஆதரவாக பேச, ஆத்திரமடைந்தவர்கள் விலங்குகளை வேட்டையாட உதவும் சுளுக்கி என்ற ஆயுதத்தால் குத்தியதில் கருப்புசாமி உயிரிழந்தார். அருண்குமார் காயமடைந்தார். சிவானந்தம் உள்ளிட்ட ஐந்து பேரையும் திருப்புவனம் போலீசார் கைது செய்தனர்.ரவுடி கொலைதஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்தவர் விமல், 25. வீட்டு வாசலிலேயே டிபன் கடை நடத்தி வந்த இவர் மீது, கும்பகோணம் மற்றும் நாச்சியார்கோவில் போலீஸ் ஸ்டேஷன்களில், பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, வீட்டின் அருகே, நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது, டூ - வீலர்களில் வந்த எட்டு பேர் கும்பல், விமலை சராமாரியாக வெட்டி தப்பி ஓடியது.
சம்பவ இடத்திலேயே விமல் இறந்தார். நாச்சியார்கோவில் போலீசார் விசாரித்தனர். விமலின் நண்பர் வெங்கடேசன் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணை, இரண்டு ஆண்டாக காதலித்து, திருமணம் செய்ய மறுத்துஉள்ளார். பெண் உறவினர்கள், வெங்கடேசனை மிரட்டியதாகவும், விமல் பெண் வீட்டாரிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில், போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE