புதுடில்லி : ஹிந்து அமைப்பின் தலைவரான யதி நரசிங்கானந்த் பெண்கள் குறித்து ஆட்சேபகரமாக தெரிவித்த கருத்துக்குதான் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் ஹரித்வார் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய பேசிய வழக்கில் கைது செய்யப்படவில்லை என்றும் உத்தரகண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார் நகரில் சமீபத்தில் 'தர்ம சன்சத்'என்ற ஹிந்து அமைப்பின் நிகழ்ச்சி நடந்தது. அதில் பலர் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. நாடு முழுதும் பலர்இந்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஹரித்வார் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜிதேந்திர தியாகி என்பவரை ஏற்கனவே கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று அந்த அமைப்பின் தலைவர் யதி நரசிங்கானந்த் என்பவரும் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து உத்தரகண்ட் போலீசார் கூறியதாவது: ஹரித்வார் நிகழ்ச்சியில் பேசியதற்காக யதி நரசிங்கானந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் பெண்கள் குறித்து ஆட்சேபகரமான கருத்து தெரிவித்த வழக்கில்தான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஹரித்வார் வழக்கிலும் அவர் கைது செய்யப்படுவார். இவ்வாறு போலீசார் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE