வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, திருநெல்வேலி மாவட்ட தி.மு.க.,வினரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், காவி உடையில் கழுத்தில் ருத்திராட்ச மாலை, நெற்றியில் திருநீறு பட்டை, குங்கும பொட்டு உடன் கூடிய திருவள்ளுவர் படம் இடம் பெற்றுள்ளது.
அந்த போஸ்டரில், முதல்வர் ஸ்டாலின், இளைஞரணி செயலர் உதயநிதி படமும் இடம் பெற்றுள்ளன. கடந்த 2020ம் ஆண்டு திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தன், சமூக வலைதளப் பக்கத்தில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படத்தை பதிவிட்டார். அதற்கு தி.மு.க., தரப்பில் கடும் எதிர்ப்பு கிளப்பியதும், அப்படத்தை நீக்கி விட்டு, வெள்ளை நிற உடையணிந்த திருவள்ளுவர் படத்தை பதிவிட்டார்.

அதேபோல, கோவையில் உள்ள வேளாண்மை பல்கலை நுாலகத்தில், அ.தி.மு.க., ஆட்சியில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் பொருத்தப்பட்டது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், ஜூன் மாதம் அப்படத்தை அகற்ற உத்தரவிடப்பட்டது. தற்போது திருநெல்வேலி தி.மு.க.,வினர், காவி உடை அணிந்த திருவள்ளுவர் போஸ்டர் ஒட்டியதை, தமிழக பா.ஜ., தரப்பில் வரவேற்றுள்ளனர். ஆனால், தி.மு.க.,வில் சலசலப்பு உருவாகி உள்ளது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE