சென்னையை ஒட்டிய மாவட்டங்களில் வாலாட்டிய ரவுடிகளுக்கு எதிராக, ஏ.டி.எஸ்.பி., வெள்ளத்துரையின் பிடி இறுகி இருப்பதால், முக்கிய ரவுடிகள் உயிருக்கு பயந்து ஒவ்வொரு மாநிலமாக இடம் மாறி வருவது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அடுத்தடுத்து பாயும் வழக்குகளால், இந்த ரவுடிகளின் கூட்டாளிகளும் சிறையே கதி என இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசார் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார், ஒரடகம் பகுதிகளில் ஐந்து 'சிப்காட்' தொழிற்பூங்காக்கள் உள்ளன. இவற்றில், 1,200 தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. சென்னை மற்றும் எண்ணுார் துறைமுகம், விமான நிலையம் ஆகியவற்றில் நடக்கும் சரக்கு போக்குவரத்தில், ஸ்ரீபெரும்புதுாரைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகள் 60 சதவீதம் பங்கு வகிக்கின்றன.
இந்த தொழிற்சாலைகளை, தங்கச்சுரங்கம் போல லெட்டர் பேடு மிரட்டல் கட்சிகள், உள்ளூர் மற்றும் வெளியூர் ரவுடிகள் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு தொழிற்சாலை நிர்வாகிகள் மாதம் தோறும் லட்சக்கணக்கில் 'கப்பம்' கட்ட வேண்டும்.
நடத்த முடியாத நிலை
லெட்டர் பேடு கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு நன்கொடை தர வேண்டும். ஸ்கார்பியோ காரில், வெள்ளை நிற உடையில் வலம் வரும் மர்ம நபர்கள் சிலர், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்களின் பெயரைச் சொல்லி வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். இதனால் தொழிற்சாலைகளை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாமூல் தர மறுத்தால், தொழிலாளர்களை துாண்டிவிட்டு உற்பத்தியை நிறுத்துதல், விதிகளை மீறி தொழிற்சாலைகள் செயல்படுவதாக மிரட்டுவது, கூலிப்படைகளை ஏவி தீர்த்து கட்டி விடுவோம் என மிரட்டல் விடுப்பது என, ரவுடிகளின் அட்டூழியத்தின் ரகங்கள் சொல்லிமாளாது.

இவர்களின் அட்டகாசத்தால், நடுத்தர தொழிற்சாலைகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது. இதுகுறித்து, நம் நாளிதழலில் அராஜகம் என்ற தலைப்பில் செய்தி வெளியானது. அதன் பின், போலீஸ் உயர் அதிகாரிகளின் பார்வை தொழிற்சாலைகள் மீது விழுந்தது.
சிறப்பு படை
சென்னையில் அட்டூழியம் செய்து வந்த அயோத்திகுப்பம் வீரமணி உள்ளிட்ட பல ரவுடிகளை என்கவுன்டர் செய்த, ஏ.டி.எஸ்.பி., வெள்ளதுரை, சிறப்பு அதிகாரியாக சென்னை புறநகர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளை ஒழித்துக் கட்ட களமிறக்கப்பட்டார். இவரது தலைமையில் லெட்டர் பேடு கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள் மற்றும் ரவுடிகளின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வர சிறப்பு படை அமைக்கப்பட்டது.
இப்படையினர் சென்னை நகரம் மற்றும் புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ரவுடிகளின் ஒட்டு மொத்த பட்டியலை தயாரித்துள்ளனர்.அதில், படப்பை குணா, குன்றத்துார் வைரம், நெடுங்குன்றம் சூர்யா என ஏராளமான ரவுடிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. போலீசார் தயாரித்துள்ள பட்டியலில் உள்ள ரவுடிகளில் சிலருக்கு என்கவுன்டர் காத்திருக்கிறது. இது குறித்து முன்கூட்டியே தகவலறிந்த ரவுடிகள், வெளி மாநிலங்களில் செல்வாக்கு படைத்தவர்களின் நிழலில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஜாமின் வேண்டாம்
இந்த ரவுடிகளின் கூட்டாளிகளை பிடித்து, அடுத்தடுத்து வழக்குகளை போட்டு போலீசார் உள்ளே தள்ளினர். அவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், பதுங்கிய ரவுடிகள் குறித்து பல தகவல்களை போலீசார் சேகரித்துள்ளனர். எப்படியும் அவர்களை பிடித்து விடலாம் என்ற நிலையில், சில கறுப்பு ஆடுகள் வாயிலாக இந்த விபரத்தையும் அறிந்து, மாநிலம் விட்டு மாநிலத்திற்கு ரவுடிகள் இடம் பெயர்வது தற்போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், முக்கிய ரவுடிகளின் கூட்டாளிகள் மீது தொடர்ந்து வழக்குகள் பாய்வதால், 'ஜாமின் வேண்டாம்; சில காலம் சிறையில் இருப்பது தான் பாதுகாப்பு' என்ற நிலைக்கு அவர்கள் வந்துவிட்டனர். ரவுடிகள் மீதான பிடி இறுகி இருப்பதால், தொழிற்சாலைகளில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வந்துள்ளன. இந்த நடவடிக்கையை இத்துடன் நிறுத்தாமல், தொழிற்சாலைகள் பாதுகாப்புடன் இயங்கும் வகையில், யாராவது ஒரு சிறப்பு அதிகாரி தலைமையில் தனிப்படை நிரந்தரமாக இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழில் நிறுவன பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
விரைவில் கைது செய்வோம்!
ரவுடிகளிடம் இருந்து போலீசாருக்கு எந்த வகையில் மாமூல் செல்கிறது என்பது குறித்து கண்காணிக்கப்படுகிறது. தவறு செய்யும் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும். ரவுடிகள் வெளிமாநிலங்களில் பதுங்கி இருக்கும் இடத்தை கண்டறிந்துள்ளோம். விரைவில் கைது செய்யப்படுவர்.
- வெள்ளத்துரை, தனிப்படை ஏ.டி.எஸ்.பி.,
'கூகுள் பே, போன் பே'வில் லஞ்சம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட 'மாமூல்' போலீசாரின் பட்டியலை, சிறப்பு தனிப்படை போலீசார் தயாரித்துள்ளனர். லஞ்சம் கொடுத்தவர்கள் சொன்னது; கேள்விபட்டவர்கள் சொன்னது என்றில்லாமல், சந்தேக வளையத்திற்குள் வந்த இன்ஸ்பெக்டர்கள் உட்பட பல்வேறு போலீசாரின் வங்கி கணக்குகள், மொபைல் போன் எண் ஆகியவற்றை கொண்டு விரிவான விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில், ஒன்றிரண்டு இன்ஸ்பெக்டர்கள் முதல் கடைநிலை காவலர்கள் வரை, ரவுடிகளிடம் மாதாந்திர மாமூல் பெற்றுள்ளனர். சிலர் கூகுல் பே, போன் பே போன்ற மொபைல் போன் ஆப் வழியாகவும் லஞ்ச பணத்தை பெற்றுள்ளனர். இந்த ஆதாரங்களின் அடிப்படையில், லஞ்ச போலீசார் களையெடுக்கப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் இந்த விவகாரம் தொடர்பாக 40 போலீசார், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு துாக்கியடிக்கப்பட்டனர். இதில், ஸ்ரீபெரும்புதுார், மணிமங்கலம், காஞ்சிபுரம் மகளிர் காவல் நிலையம், சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத், ஒரகடம் காவல் நிலையங்களில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் முதல் கடைநிலை காவலர்கள் வரை இடம் பெற்றுள்ளனர்.
இவர்களை தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய தெற்கு மண்டலத்திற்கு மாற்றி டி.ஜி.பி., சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.ரவுடிகளிடம் தற்போதும் தொடர்பில் உள்ள, போலீசார் குறித்தும் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE