மதுரை : ''நீட் தேர்வு விவகாரத்தில் அதன் உண்மையான பயன்களை மக்களிடம் மறைத்து தி.மு.க., அரசு அரசியல் செய்கிறது,'' என, மதுரையில் பா.ஜ., மருத்துவரணி மாநில தலைவர் விஜயபாண்டியன் குற்றம்சாட்டினார்.
அவர் கூறியதாவது:
நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் சில ஆண்டுகளாக தயாராகி வருகின்றனர். 2020 நீட் தேர்வில் மொத்தமுள்ள 180 கேள்விகளில் 174 கேள்விகள் தமிழக பாடத்திட்டத்திலிருந்து இடம் பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழிலும் தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலம் இடைத்தரகர்கள், பண பரிமாற்றம் போன்றவை ஒழிக்கப்பட்டுள்ளன.
முடிவுகள் அறிவிக்கும் முன்னரே அந்தந்த மாணவர்களுடைய விடைத்தாள்களையும், அதற்குரிய விடைகளையும் அவர்கள் அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.முரண்பாடுகள் இருப்பின் தெரிவிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களை கருத்தில் கொண்டு நுழைவு தேர்வு முடிந்த பிறகும் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இதுபோன்ற நீட் தேர்வின் உண்மையான பயன்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க தி.மு.க., அரசு தயங்குகிறது.உச்சநீதிமன்றம் உத்தரவின்படி நீட் தேர்வு நடத்தப்படுகிறது. எனவே இத்தேர்வு விவகாரத்தில் மாணவர்களை தயார்படுத்தும் பணிகளை துவக்க தி.மு.க., அரசு இனியாவது முன்வர வேண்டும் என்றார்.
நகர் தலைவர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE