மதுரை : தமிழகத்தில் அரசு விடுதிக் காப்பாளர்களுக்கு விருப்ப மாறுதல் என்ற பெயரில் வழங்கப்படும் கட்டாய மாறுதல் உத்தரவை கொரோனா பரவல் தீவிரத்தை மனதில் வைத்து தள்ளிவைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இத்துறையில் பட்டதாரி, முதுகலை நிலையில் உள்ள விடுதிக் காப்பாளர்களுக்கு ஜன., 7 முதல் நான்கு நாட்கள் சென்னையில் மாறுதல் கலந்தாய்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டு, முதல் நாள் மட்டும் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக சுகாதாரத் துறை எச்சரித்ததால் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் ஜன., 19 முதல் அந்தந்த மாவட்டங்களில் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து காப்பாளர்கள் கூறியதாவது:
இத்துறையின் எண் 162 உத்தரவு வழிகாட்டுதல் நெறிமுறையில் 'ஆசிரியர் பணி நிர்வாகப் பணியிடங்கள் அல்ல என்பதால் மூன்று ஆண்டுகள் பணி முடித்த ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட தேவையில்லை' என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விதி விடுதிக் காப்பாளர்களுக்கும் பொருந்தும்.
மேலும் இக்கல்வியாண்டு முடிய இன்னும் இரண்டு மாதம் இருக்கும் நிலையில் தற்போது இடமாறுதல் அளிக்கப்பட்டால் கொரோனா பரவும் சூழலில் குடும்பங்களை எவ்வாறு மாற்றிக் கொண்டு செல்வது.குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்ப்பது சவாலாக மாறும். தற்போது தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் அவசரகதியில் நடத்தாமல் நோய் தொற்று அல்லது கல்வியாண்டு முடிவுற்ற பின் இதுபோன்ற கலந்தாய்வு நடத்த திட்டமிட வேண்டும், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE