உடுமலை : கொப்பரைக்கு நிலையான விலை கிடைக்காததால், உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் மந்த நிலை ஏற்பட்டு விவசாயிகள், தொழிலாளர்கள் பாதித்துள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. உற்பத்தியாகும் தேங்காய்களை கொப்பரையாக மதிப்பு கூட்டி, விற்பனை செய்கின்றனர். இதற்காக இப்பகுதியில், நுாற்றுக்கணக்கான கொப்பரை உலர் களங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், கடந்த சில வாரங்களாக, கொப்பரை விலை நிலையாக இல்லை. கிலோ, நுாறு ரூபாய்க்கு கீழ் சென்றதால், விவசாயிகள், கொப்பரை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தொடர் விலை வீழ்ச்சியால், உலர் களங்களில், கொப்பரை உற்பத்தி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது; அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் வேலை கிடைப்பதில்லை.இதே போல், தென்னந்தோப்புகளில், தேங்காய் கொள்முதலையும், வியாபாரிகள் குறைத்துள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொப்பரை வர்த்தகத்தில் மந்த நிலை நிலவுவதால், தென்னை சார்ந்த உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் கவலையடைந்துள்ளனர்.
மட்டைக்கும் விலையில்லை
கொப்பரை உலர் களங்களில், தேங்காயை உடைத்து, பருப்பை பிரித்த பிறகு, மட்டை, தேங்காய் தொட்டியும் விற்பனை செய்யப்படும்.தேங்காய் மட்டை, தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கும், தொட்டி, கரித்தொட்டி தயாரிக்கவும் விற்பனைக்கு அனுப்பப்படும்.
தென்னை நார் தொழிற்சாலைகளிலும் பல்வேறு காரணங்களால், உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதால், தேங்காய் மட்டை விலையும் சரிந்துள்ளது; தொட்டிக்கும் விலை கிடைப்பதில்லை. இதுவும் வர்த்தகம் பாதிப்புக்கு முக்கிய காரணமாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE