பொள்ளாச்சி : பொள்ளாச்சி விவசாயிகள் இந்தாண்டு கோடையில், பயிர்களுக்கு பாசனம் செய்வது குறித்து கவலையில்லை, என, நம்பிக்கை தெரிவித்தனர்.
பொள்ளாச்சி பகுதியில், பாசனம் அதிகம் தேவைப்படும் தென்னை மற்றும் வாழை அதிகளவில் பயிரிடப்படுகின்றன. இதில், தென்னை நீண்ட கால பயிர், வாழை ஓராண்டு பயிர் என்பதால், அவற்றுக்கு தேவையான பாசனத்தை ஆண்டு முழுக்க அளிக்க வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு உள்ளது.அதற்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் போதுமான அளவு பெய்து, பாசன ஆதாரங்கள் நிரம்ப வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன், பருவமழைகள் பொய்த்து, பாசன ஆதாரங்கள் வற்றிப்போய், நுாற்றுக்கணக்கான ெஹக்டேர் தென்னை மற்றும் வாழை பயிர்கள் பாசனமின்றி பாதித்தன.ஆனால், கடந்த மூன்றாண்டுகளாக பருவமழைகள் போதுமான அளவு பெய்கிறது. குறிப்பாக, கடந்தாண்டு, வடகிழக்கு பருவமழை, எதிர்பார்த்ததை விட கூடுதல் நாட்களும், அதிக அளவிலும் பெய்ததால், பாசன ஆதாரங்கள் நிரப்பியுள்ளன.
மழை நின்று ஒரு மாதத்துக்கு மேலாகியும், தடுப்பணைகள், சிற்றாறுகளில் உபரிநீர் நிரம்பி வழிவது தொடர்கிறது. இதனால், தை முதல் வைகாசி வரையான கோடை காலத்தை சமாளிப்பது பெரிய பிரச்னையாக இருக்காது எனவும், பயிர்களுக்கு போதுமான பாசனம் அளிக்க இயலும் என்றும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE