வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா நாட்டின் கடலுக்கடியில் இருந்த எரிமலை வெடித்ததால், அந்த நாட்டில் சுனாமி அலை தாக்கியது. சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதன் அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி நாடு டோங்கா. இங்குள்ள ஹங்காஹபாய் மற்றும் ஹங்காடோங்கா தீவுகளில் அடிக்கடி எரிமலை வெடிப்பு ஏற்படும். இங்கு கடல் மட்டத்தில் இருந்து, 300 அடி உயரமுள்ள ஒரு எரிமலை உள்ளது. ஆனால் கடலுக்கு அடியில் 5,900 அடி உயரமும், 20 கி.மீ., துாரத்துக்கும் மிகப் பெரிய எரிமலையாக பரந்து விரிந்திருந்தது. இந்த எரிமலை சமீபத்தில் வெடித்து சிதறியது. இதன் தொடர்ச்சியாக டோங்காவில் உள்ள குட்டித் தீவுகளை சுனாமி அலை தாக்கியது. குடியிருப்பு பகுதிக்குள்ளும் கடல் நீர் புகுந்தது.

இந்த எரிமலை வெடிப்பின் அழுத்தத்தால் ஏற்பட்ட அதிர்வலைகள் உலகின் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக டோங்கா நாட்டில் இருந்து சுமார் 2,500 கி.மீ தொலைவில் உள்ள நியூசிலாந்திலும், சுமார் 9,500 கி.மீ தொலைவில் இருக்கும் அமெரிக்காவிலும் அதிர்வு உணரப்பட்டது. அதேபோல், சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அதிர்வு பதிவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜன.,15 அன்று இரவு 8:15 மணியளவில் சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் அதிர்வு உணரப்பட்டதாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE