தர்மபுரி: கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவலால், தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தியது. பின், ஞாயிற்றுக்கிழமைக்களில் தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கை அமல்படுத்தியது. நேற்று, இரண்டாவது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தர்மபுரியில் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தடையை மீறி சாலைகளில் சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிந்து அபராதம் விதித்தனர்.
* நேற்று, பஸ் சேவை நிறுத்தப்பட்டதால், அரூர் பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடியது. பஸ் ஸ்டாண்ட், நான்கு ரோடு, கச்சேரிமேடு, பழையபேட்டை பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். கட்டுப்பாடுகளை மீறி வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் மீது வழக்குப்பதிந்தனர் மருந்து, பால் கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. சேலம் - திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனங்கள் வழக்கம் போல் இயங்கின.
* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு, 10:00 மணி முதல் கடைகள் அடைக்கப்பட்டன. நேற்றும், பால், மருந்து, சில ஓட்டல்களை தவிர மற்ற அனைத்து கடைகளும், 100 சதவீதம் மூடப்பட்டிருந்தன. பஸ், ஆட்டோ, கார் என எந்த வாகனங்களும் இயக்கவில்லை. தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள் மட்டுமே ஓடின. கிருஷ்ணகிரி நகரில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடின. மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் அவசியமின்றி வாகனங்களில் சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
* ஊத்தங்கரையில் முக்கிய பிரதான சாலைகளில், மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிது. ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்தவர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிந்து அபராதம் விதித்தனர். ஊத்தங்கரை டி.எஸ்.பி., அலெக்சாண்டர், இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர் ரவுண்டானாவில் காரணமின்றி சுற்றித்திரியும் நபர்களை நிறுத்தி, அவர்களுக்கு நோய் தொற்று குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி, கட்டாயம் முக கவசம் அணிய எச்சரித்து அனுப்பினர்.
ஆதரவற்றோருக்கு உணவு: தர்மபுரி மாவட்டத்தில் சாலை, தெருக்களில் சுற்றித்திரியும் ஆதரவற்றோர் பலருக்கு, முழு ஊரடங்கால் உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. அவர்களுக்கு பல தன்னார்வலர்கள், போலீசாரின் அனுமதி பெற்று உணவு, குடிநீர் வழங்கினர். மேலும், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஊர்காவல் படையினருக்கும் அவர்கள் உணவு வழங்கினர்.
கருணை, கண்டிப்பு: நேற்று காணும் பொங்கல் என்பதால், மக்கள் பலர் இறைச்சி வாங்க வாகனங்களில் வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தி, கண்டிப்பு காட்டி அனுப்பி வைத்தனர். மேலும், மத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே மளிகைக் கடையிலும், ஊத்தங்கரை - திருவண்ணாமலை பிரிவு சாலையிலுள்ள ஓட்டலிலும், மது விற்பனைக்கு கருணை காட்டினர். இதனால், முழு ஊரடங்கிலும் தாராள மது விற்பனை நடந்தது.
அதிருப்தி: கிருஷ்ணகிரி பழையபேட்டை யில், காரில் வந்தவர்களை நிறுத்திய போலீசார், ஏன் முக கவசம் அணியாமல் வெளியே வருகிறீர்கள் என கேட்டபோது, பலர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அதிருப்தி அடைந்தனர்.
இறைச்சி விற்பனை ஜோர்: பொங்கல் பண்டிகை கரிநாளான நேற்று, முழு ஊரடங்கால் தர்மபுரி மாவட்டம் முழுவதும் இறைச்சி கடைகள் மூடப்பட்டன. கிராம பகுதிகளில் உள்ளவர்கள் தங்களது வீடுகளில் வளர்த்த கோழியை சமைத்தும், ஆடுகளை வெட்டி பங்குகளாக பிரித்தும் கரிநாளை கொண்டாடினர். பலர் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து, அசைவ உணவை வாங்கினர். இதனால், அசைவ உணவு கடைகளில் பார்சல் விற்பனை அமோகமாக நடந்தது.
* பாப்பிரெட்டிப்பட்டியில் அதிகாலை முதலே இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. வெங்கடசமுத்திரம், பையர்நத்தம், பொம்மிடி, வடசந்தௌயூர், கடத்தூர், ராமியம்பட்டி, வீரகானூர் உள்ளிட்ட பகுதிகளில், இறைச்சி விற்பனை நடந்தது.
* காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டை உள்ளிட்ட நகரின் எல்லைப் பகுதிகளிலுள்ள இறைச்சிக்கடைகள் திறக்கப்பட்டு, சிக்கன், மட்டன் விற்பனை ஜோராக நடந்தது.
* அரூர் பஸ் ஸ்டாண்ட், ஈச்சம்பாடி, முத்தானூர், நரிப்பள்ளி, பொய்யப்பட்டி, அச்சல்வாடி, கீரைப்பட்டி, ஒடசல்பட்டி, பறையப்பட்டி புதூர் உள்ளிட்ட பல இடங்களில், ஆடு, மாடு மற்றும் கோழி இறைச்சி விற்பனை ஜோராக நடந்தது. மக்களும் ஊரடங்கை மதிக்காமல், இறைச்சி வாங்கிச்சென்றனர். அரூரில் ஆர்டரின் பெயரில், வீடு வீடாக இறைச்சி வினியோகம் நடந்தது. அதேபோல், கிராமங்களில் மளிகை, டீ கடை ஆகியவை வழக்கம்போல் திறந்திருந்தன.