மூணாறு; இடுக்கி மாவட்டம் உருவாகி 50ம் ஆண்டு ஆனதை எண்ணி பெருமிதம் அடையும்போது மூணாறில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதியுற்று வருவது பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி மாவட்டம் உருவான 50ம் ஆண்டை மாவட்ட நிர்வாகம் வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறது. அதனை எண்ணி பெருமிதம் அடையும்போது, மாவட்டத்தில் உலக அளவில் பிரசித்து பெற்றுள்ள சுற்றுலா பகுதியான மூணாறில் அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அல்லல்படுவது பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நூற்றாண்டிற்கு முன்பு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட நகரின் கட்டமைப்பு அது போன்று தொடர்கிறது.
தனியார் தேயிலை கம்பெனியின் கைவசம் நகர் உள்ளதால் வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது. அதற்கு தீர்வு காண மாநிலத்தில் மாறி, மாறி ஆட்சி நடத்தும் காங்கிரஸ் மற்றும் இடது சாரி கூட்டணி அரசுகள் முன்வராததால் நகரின் கட்டமைப்பை மாற்ற இயலாமல் குடிநீர், கழிப்பறை, பஸ் ஸ்டாண்ட், வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்பட அடிப்படை வசதிகளை இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். அவற்றைக் காட்டிலும் மருத்துவ வசதி இன்றி மக்கள் அவதியுற்று வருவதை அரசுகள் கண்டு கொள்வதில்லை. மூணாறில் பாடா கம்பெனிக்குச் சொந்தமான மருத்துவமனை மட்டும் உள்ளது.
அதில் தோட்டத் தொழிலாளர்கள் தவிர பிறர் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெற வேண்டும். அதுவும் மருத்துவமனையில் உயிர்காக்கும் மருத்துவ வசதி இல்லாததால் தொழிலாளர்கள் உள்பட பொதுமக்கள் உயிர் காக்கும் மருத்துவ தேவைக்கு நூறு கி.மீ., அப்பால் உள்ள கோட்டயம் அல்லது 86 கி.மீ., தொலைவில் உள்ள தேனி ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும். அதனால் குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சை பெற இயலாமல் உயிர்பலி ஏற்படுவது தொடர் கதையாக வருகிறது. மூணாறில் அடிப்படை வசதிகளுக்கு தீர்வு கிடைக்காத நிலையில் மாவட்டம் உருவாகி 50 ஆண்டுகள் ஆனதை எண்ணி பெருமிதம் கொள்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE