தூத்துக்குடி: குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள் அலங்கார ஊர்தி நிராகரிப்பு செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த பிரச்னை தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சியின் கொள்ளு பேத்தி செல்வி கூறியதாவது: இந்திய விடுதலைக்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் அவர்களின் வரலாறுகளை பற்றி அடுத்த தலைமுறையினரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையிலும், தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் விழாக்களில் நடைபெறும் அணிவகுப்பின் போது சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் வரலாறு அடங்கிய வாகன ஊர்திகள் ஆண்டாண்டு காலமாக இடம்பெற்று வருவது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், மகாகவி பாரதியார் ஆகியோர் இடம் பெற்றிருந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. சுதந்திர போராட்ட வாரிசுகள் மற்றும் தமிழக மக்களையும் உணர்வுகளை வேதனை அடையச் செய்துள்ளது. சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் ஒவ்வொரு தலைமுறைக்கும் தெரிய வேண்டியது அவசியம் என்பதால் ஒன்றிய அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது எங்களின் கோரிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE