தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை: முல்லை பெரியாறு அணை கட்டிய பென்னி குவிக்கிற்கு, அவர் பிறந்த, பிரிட்டன் நாட்டின், இங்கிலாந்து அருகில் உள்ள ஊரில், தமிழக அரசு சார்பில் சிலை அமைக்கப்படுவது வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வு. தமிழக காங்கிரஸ் சார்பாக, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.அப்படியே, கர்நாடகா காங்கிரஸ் தலைவர்களிடம் பேசி, காவிரியில், கர்நாடகாவின் மேகதாது என்ற இடத்தில், அணை கட்டும் விவகாரத்தை கைவிடச் சொன்னால், தமிழகத்திற்கு நல்லதாக இருக்குமே!
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிக்கை: பிரதமர் மோடியின் சீரிய தலைமையின் கீழ், நம் நாடு, தடுப்பூசியில் சாதனை படைத்து வருகிறது. வயது வந்தோரில், 92 சதவீதம் பேர் ஒரு, 'டோஸ்' ஊசியும், 70 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளனர். மேலும், 15 - 18 வயதினரில், மூன்று கோடி பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.இதுவே, தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலினின் சாதனையாக இருந்திருந்தால், 'தடுப்பூசி நாயகன்' என பட்டம் கொடுத்திருப்பர். பா.ஜ.,வுக்கு அந்த பக்குவம் இன்னும் வரவில்லையே!
தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., செயலர் தங்க தமிழ்செல்வன் அறிக்கை: 'முல்லை பெரியாறு அணை கட்டிய பென்னி குவிக்கிற்கு, பிரிட்டன் நாட்டின் இங்கிலாந்து நகருக்கு அருகில் உள்ள கேம்பர்ளி என்ற இடத்தில், தமிழக அரசு சார்பில் சிலை நிறுவப்படும்' என அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு, தேனி மாவட்ட மக்கள் சார்பில் நன்றி.இப்போது, பென்னி குவிக்கிற்கு சிலை வைப்பார், நம் முதல்வர். அப்படியே, ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதிக்கும் அங்கு இடம் பார்த்து வைத்தாலும் வைத்து விடுவாரே!
சினிமா இயக்குனர் மோகன் ஜி ஷத்ரியன் அறிக்கை: தமிழகத்தில், மது இல்லாமல் பண்டிகை இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. அடுத்த தலைமுறை இளைஞர்களில், 5 சதவீதம் பேர் கூட மது அருந்தாதவர்கள் இல்லை. சிந்திக்கும் திறன், உழைக்கும் திறன் இவர்களிடம் குறைவது உறுதி. என் தமிழகத்தை காப்பாற்ற யாராவது வர வேண்டும் இறைவா!இது தான், தமிழகத்தின் பெரும்பாலான பெண்களின் வேண்டுகோளாகவும் உள்ளது!
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு: கோவா சட்டசபை தேர்தலில், எங்களின், ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றால், 24 மணி நேரமும் இலவச மின்சாரம், தண்ணீர் வழங்குவோம். அனைத்து அரசு பள்ளிகளிலும் இலவச கல்வி வழங்கப்படும். அனைத்து கிராமங்களிலும் இலவச சுகாதார நிலையம் அமைத்து தருவோம்.சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டுகள் ஆன பிறகும், சிறிய மாநிலமான கோவாவுக்கு இத்தனை ஆண்டுகளாக இவை கிடைக்கவில்லையா?
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE