'பசை'யான பதவியை விட மறுக்கும் அதிகாரி!
ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''எஸ்.பி.,க்கே அல்வா குடுத்துட்டு இருக்காங்க பா...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.
''யாருவே அந்த கில்லாடி...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''சேலம் மாவட்டம், சங்ககிரியில எஸ்.பி., தனிப்பிரிவு ஏட்டா இருக்கிறவர், கொங்கணாபுரம் தனிப்பிரிவையும் கூடுதலா கவனிச்சிட்டு இருக்காரு பா...
''சங்ககிரி பகுதியில நடக்கிற சட்டவிரோத செயல்களை, எஸ்.பி.,க்கு அப்பப்ப தெரியப்படுத்துறது தான் இவரது பணி... ஆனா, லாட்டரி சீட்டு விற்பனை, சந்துக்கடை, தாபாக்கள்ல நடக்கிற மது விற்பனை பத்தி எல்லாம் எஸ்.பி.,கிட்ட மூச்சே காட்ட மாட்டேங்கிறாரு பா...
''சங்ககிரி ஸ்டேஷன் உயர் அதிகாரியோட மாமூல் கூட்டணி போட்டுக்கிட்டு, தனி ராஜாங்கமே நடத்துறாரு... உள்ளூர் நிருபர்கள் சிலரையும், இந்த கூட்டணி வளைச்சு போட்டிருக்கிறதால, 'எந்த தகவலும் எஸ்.பி., காதுக்கு போகாது'ன்னு ஜம்பமா வேற சொல்லிக்கிறாருபா...''
என்றார் அன்வர்பாய்.
''பாலாஜி சப்போர்ட் இருக்கற வரை, தேவியை யாரும், எதுவும் பண்ண முடியாது ஓய்...'' என மொபைல் போனில் பேசியபடியே வந்த குப்பண்ணா, ''வெயிட்டா யாராவது வருவான்னு, போஸ்டிங் போடாம இருக்கா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.
''எந்த போஸ்டிங்கை சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''நீலகிரி மாவட்டம், முதுமலை உள்வட்ட பகுதிக்கு துணை இயக்குனரா, போன வருஷம் ஜனவரியில நியமிக்கப்பட்ட பெண் ஐ.எப்.எஸ்., அதிகாரியை, ஜூலை மாசம் இடமாற்றம் செய்துட்டா...
''கூடலுார், டி.எப்.ஓ., தான், துணை இயக்குனர் பொறுப்பை கூடுதலா கவனிச்சுண்டு இருக்கார்... பசையான இந்த இடத்தை பிடிக்க, அதிகாரிகள் மத்தியில பெரிய அளவுல போட்டி இல்லை ஓய்...
''ஆனாலும், யாராவது இந்தப் பதவிக்கு வெயிட்டா எடுத்துண்டு வருவா... வந்ததும், போஸ்டிங்கை நிரப்பிக்கலாம்னு, புதிய அதிகாரியை நியமிக்காம துறையின் மேலிடம் காத்துண்டு இருக்குன்னு துறை வட்டாரங்கள்ல பேசிக்கறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.
''எங்கிட்டயும் பசையான மேட்டர் ஒண்ணு இருக்குல்லா...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''கோவை மாநகராட்சியில அஞ்சு மண்டலம் இருக்கு... இதுல, கிழக்கு, மேற்கு மண்டலங்களுக்கு, வருவாய்த் துறையில இருந்து சப் - கலெக்டர் அந்தஸ்து அதிகாரிகளை, உதவி கமிஷனரா நியமிப்பாவ வே...
''மேற்கு மண்டலத்துல இருந்தவர், நாமக்கல்லுக்கு டிரான்ஸ்பர்ல போயிட்டாரு... அந்தப் பதவிக்கு, நீலகிரி டாஸ்மாக்ல அதிகாரியா இருந்தவரை, போன வருஷம் நவம்பர் 30ல நியமிச்சு அரசாங்கம் உத்தரவு போட்டுச்சு வே...
''ஆனா, தேன் பானையான டாஸ்மாக்கை விட்டுட்டு வர அதிகாரிக்கு மனசு இல்லை... அரசு உத்தரவு போட்டு ஒன்றரை மாசமாகியும், புதிய அதிகாரி வராததால, மாநகராட்சியில இருக்கிற இன்னொரு அதிகாரிக்கு, மேற்கு மண்டல பொறுப்பை கூடுதலா குடுத்திருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''சேகர் இப்படி உட்காரும்... நாங்க கிளம்பறோம்...'' என, நண்பருக்கு இடம் தந்தபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE