வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் ஆன்லைன்' வாயிலாக இன்று துவங்கி ஐந்து நாட்கள் நடக்கும் உலக பொருளாதார மன்ற மாநாட்டில் இன்று பிரதமர் நரேந்திர மோடி, பேசினார்.

பிரதமர் மோடி பேசியதாவது
இந்தியா சுதந்திரத்தின் 75 வது ஆண்டைக் கொண்டாடுகிறது, மேலும் நாட்டில் 156 கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி சாதித்து, உலகிற்கு இந்தியா நம்பிக்கையின் பூச்செண்டை பரிசாக அளித்துள்ளது.
இந்தியர்களாகிய நமக்கு நமது ஜனநாயகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது, 21ஆம் நூற்றாண்டை இந்தியர்களின் மனோபாவம் மற்றும் திறமையால் மேம்படுத்தும் தொழில்நுட்பம் எங்களிடம் உள்ளது.
இன்று, இந்தியா உலகின் 3வது பெரிய மருந்து உற்பத்தியாளராக உள்ளது. கோவிட் காலங்களில், 'ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்' என்ற தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி, பல நாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்கி, கோடிக்கணக்கான உயிர்களை இந்தியா காப்பாற்றியது என்பது எல்லோருக்கும் தெரியும். இன்று இந்தியா உலகின் மிகப்பெரிய, பாதுகாப்பான மற்றும் வெற்றிகரமான டிஜிட்டல் பேமெண்ட் தளத்தைக் கொண்டுள்ளது. கடந்த மாதத்தில் மட்டும், யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) மூலம் இந்தியாவில் 4.4 பில்லியன் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம். இந்தியர்களிடம் உள்ள தொழில்முனைவோர் மனப்பான்மை, புதிய தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்ளும் திறன், நமது ஒவ்வொரு உலகளாவிய நட்பு நாடுகளுக்கு புதிய ஆற்றலை வழங்க முடியும்.
2014 இல், இந்தியாவில் சில நூறுதான் பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப்கள் இருந்தன. கடந்த 6 மாதங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ள நிலையில் இன்று அவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நாட்டில் இன்று 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மென்பொருள் உருவாக்குநர்கள் பணிபுரிகின்றனர். இவ்வாறு டாவோஸ் உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE