'ஆன்லைன்' சூதாட்டத்தை தடை செய்வது சாத்தியமா என்பது குறித்து வழக்கறிஞர் சரண்ராஜ்: ஆன்லைன் ரம்மி விளையாட்டை ஏற்கனவே, 2020 நவ., 21ல் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு தடை செய்தது. அதை எதிர்த்து சில நிறுவனங்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இது திறமைகளுக்கான விளையாட்டு என்றும், சூதாட்டம் இல்லை என்றும் வாதிட்டன. தமிழக அரசின் எதிர்வாதம் வலுவாக இல்லாததால், தமிழக அரசு கொண்டு வந்துள்ள தடைச் சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்று கூறி, 2021 ஆக., 3ல் தீர்ப்பளித்து. உரிய விதிமுறைகளைக் கொண்டு வந்து முறைப்படுத்தும்படியும் தன் உத்தரவில் தெரிவித்தது.
மக்களின் நல்வாழ்வைக் காப்பதும், உறுதிபடுத்துவதும் தான் அரசின் கடமை.ஆன்லைன் சூதாட்டச் செயலி நிறுவனங்கள், திறமையை வெளிப்படுத்தும் விளையாட்டாகத் தான் தங்களை முன்வைக்கின்றன. இதில் திறமையாக விளையாடுவோரால் வெற்றி பெற முடிகிறது என்றும், பலரின் மரணத்துக்குக் காரணமான ஜல்லிக்கட்டு விளையாட்டையே அனுமதிக்கும்போது, இதை மட்டும் ஏன் தடுக்கின்றனர் என்றும் வாதிட்டதால் தான், தமிழக அரசு விதித்த தடை நீக்கப்பட்டது.எனவே, மீண்டும் தடையைக் கொண்டு வர வேண்டுமென்றால், இவை சூதாட்டச் செயலிகள் தான் என்பதையும், இவற்றில் உள்ள டெக்னிகல் மோசடிகளையும் தொழில்நுட்ப ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு.அதேபோல, மத்திய அரசும், மாநில அரசின் பார்வையோடு ஒத்துப் போக வேண்டும். இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கள் சூதாட்டங்களே என்பதையும், மோசடி நடக்கிறது என்பதையும் மத்திய அரசும் ஏற்றுக் கொண்டு, தன் வாதத்தை வைக்க வேண்டும்.
மேலும், நீதிமன்றமும், இந்த செயலிகளால் பணத்தை இழந்து, தற்கொலை செய்யும் பொது மக்களின் துயரை உணர்ந்து, அவ்வழக்கை அணுகும் பட்சத்தில், இந்தியா முழுமைக்கும் இச்செயலிகளை தடை செய்ய வாய்ப்புள்ளது.பொருளாதார இழப்பு, உயிரிழப்பு, சமூகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் அத்துமீறல்கள் அதிகரிப்பதில் மதுபானங்களுக்கும் பங்கிருக்கிறது. எனினும், மதுபான விற்பனைக்கு நேர வரம்பும், வயது வரம்பும் நிர்ணயித்து அரசு செயல்படுத்துவது போல், இதற்கும் வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE