சென்னை : 'மாற்றுத் திறனாளி மரணத்திற்கு காரணமான, போலீசாரை கைது செய்ய வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட பிரபாகரன் என்ற மாற்றுத் திறனாளி உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. போலீஸ் தாக்கியதே மாற்றுத் திறனாளியின் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.கடந்த, 8ம் தேதி கைது செய்யப்பட்ட அவர், சேந்தமங்கலம் போலீஸ் குடியிருப்பில் சட்டவிரோதமாக வைத்து தாக்கப்பட்டிருக்கிறார். அதனால், சிறையில் அடைக்கப்பட்ட பின், பிரபாகரனுக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
பிரபாகரனின் உயிரிழப்பு தொடர்பாக, மூன்று போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; இது போதுமானதல்ல. பிரபாகரனின் மரணத்திற்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். அவரது குடும்பத்திற்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை:
சென்னை ரேடியோ மற்றும் பொதிகை 'டிவி' செய்திப்பிரிவுக்கு, ஆறு மாவட்டங்களில், எட்டு ஊடக செய்தியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை அடிப்படையாக வைத்து பல்வேறு சந்தேகங்களும், அச்சங்களும் எழுந்து உள்ளன.
சென்னை ரேடியோ மற்றும் 'டிவி'க்கு, 38 மாவட்டங்களிலும், பகுதி நேர செய்தியாளர்கள் உள்ளனர். பகுதிநேர செய்தியாளர்கள் என்ற பெயரில், அவர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முழு நேரமும் பணியாற்றி வருகின்றனர். வாழ்க்கையின் பெரும் பகுதியை, இந்த பணியில் கழித்து விட்ட அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு பதிலாக, நீக்கம் செய்ய நினைப்பது, எந்த வகையிலும் நியாயமல்ல. பகுதி நேர செய்தியாளர்களை படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE