பா.ஜ.,வுக்கு வெற்றி வியூகம்; தனியார் நிறுவனங்கள் ஆர்வம்
சென்னை மாநகராட்சி தேர்தலில், பா.ஜ., சார்பில் அதிக கவுன்சிலர்கள் வெற்றி பெற வேண்டும் என்பதில், அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம், அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் நேர்காணல் நடத்தியுள்ளனர்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் நேர்காணலில் பங்கேற்ற சிலர், ௧ கோடி ரூபாய் வரை செலவு செய்ய தயாராக இருப்பதாகவும், எடுத்து வந்த பணத்தையும், நேர்காணல் நடத்தியவர்களிடம் காட்டி உள்ளனர். கூட்டணியாக போட்டியிட்டால் என்னென்ன கடைப்பிடிப்பது; தனித்து போட்டியிட்டால் என்னென்ன வியூகத்தை கடைப்பிடிப்பது என, வார்டு வாரியாக வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து, பா.ஜ., சார்பில் அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த சூழலில், சென்னையில் பா.ஜ., வெற்றி பெற, என்னென்ன யுக்திகளை கையாள வேண்டும் என்ற வியூகம் வகுத்து கொடுக்க, பல ஆலோசனை நிறுவனங்களும் முன்வந்துள்ளன. அதில், தி.மு.க.,வுக்கு சட்டசபை தேர்தலில் ஆலோசனை வழங்கிய நிறுவனத்தில் வேலை பார்த்த சிலரும், அ.தி.மு.க.,வுக்கு ஆலோசனை வழங்கிய நிறுவனத்தில் வேலை பார்த்த சிலரும் இடம் பெற்று இருக்கின்றனராம்.
வியூகம் வகுத்து கொடுக்க விருப்பம் தெரிவித்துள்ளோரிடம், 'மாநில தலைவரிடம் தெரிவிக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்தால் உங்களிடம் ஆலோசனை கேட்கப்படும்' என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் தி.மு.க.,வுக்கும் சென்றுள்ளது. இதனால், சென்னை மாநகராட்சி தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க.,வுக்கு, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வை விட, பா.ஜ., தான் கடும் நெருக்கடி கொடுக்கும் என்று தி.மு.க.,வினரே கருதுகின்றனராம்.
அடக்கி வாசிப்பரா ஆளும் கட்சியினர்?
தமிழகத்தில் மணல் விற்பனையில் புதிய விதிமுறைகளை, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ள நிலையில், தற்போதுள்ள 16 மணல் குவாரிகளில், ஒன்பது குவாரிகளுக்கு சுற்றுச்சூழல் தடையின்மை சான்று பெறப்பட்டுஉள்ளது. மீதமுள்ள குவாரிகளுக்கும் சான்று பெறும் முயற்சி நடந்து வருகிறது.
இந்நிலையில், அனுமதி பெறப்பட்ட ஒன்பது குவாரிகளில் மணல் எடுக்க, மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி தரப்பட்டுஉள்ளதாம். நிறுவனங்களின் நிர்வாக திறன், முந்தைய பணித் திறனை அடிப்படையாக வைத்து, இந்நிறுவனங்களை தேர்ந்தெடுத்துள்ளனராம்.மேலும் தி.மு.க.,வை சேர்ந்தவர்களுக்கும் மணல் விற்பனை உரிமம் தரப்பட்டுள்ளதால், புகார் வராத வண்ணம் செயலாற்ற அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.
மணல் விற்பனையை, கண்காணிப்பு கேமரா சகிதம், நவீன தகவல் தொழில்நுட்ப வசதியோடு, புதிய வழிகாட்டுதல்களுடன் செயல்படுத்த வேண்டும் என, ஆளும் அரசு திட்டமிட்டுள்ளது. பொது மக்கள் பயன்பாட்டிற்கு காலை 8:00 முதல் 2:00 மணி வரையிலும், ஒப்பந்ததாரர்களுக்கு மதியம் 2:00 முதல் 5:00 மணி வரையிலும், இருப்பை பொறுத்து மணல் விற்பனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பொது மக்கள் மணலை பெற, 'ஆன்லைனில்' முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுஉள்ளது. இந்த முறை மணல் தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதிலும், கெட்ட பெயர் வரக் கூடாது என்பதிலும் ஆளும் அரசு உறுதியாக உள்ளதாம். ஆனால், ஆளும் கட்சியினர் அடக்கி வாசிப்பரா என்பது தான் தெரியவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE