பாட்னா : ''வரம்பு மீறாமல் நடந்து கொள்ளுங்கள்,'' என, ஐக்கிய ஜனதா தள கட்சியினருக்கு, பீஹார் மாநில பா.ஜ., தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரைச் சேர்ந்தவர் தயா பிரகாஷ் சின்ஹா. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான சின்ஹா, பா.ஜ.,வின் கலாசார பிரிவு ஒருங்கிணைப்பாளராக பதவி வகிக்கிறார். பத்மஸ்ரீ விருது பெற்றவர்.
![]()
|
அசோகர் குறித்து இவர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பீஹார் மாநிலம் கோட்வாலி போலீஸ் ஸ்டேஷனில் சின்ஹா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தயா பிரகாஷ் சின்ஹாவுக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் ராஜின் ரஞ்சன் மற்றும் அக்கட்சியின் பார்லி., தலைவர் உபேந்திர குஷ்வாஹா ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர்.
இதுதொடர்பாக பீஹார் மாநில பா.ஜ., தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கை: சின்ஹாவை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுப்பதற்கு பதில், விருதை திரும்ப பெற வேண்டும் என ஏன் வலியுறுத்துகின்றனர். இதை விட முட்டாள்தனமாக கோரிக்கை எதுவும் இருக்க முடியாது. கூட்டணி கட்சியில் கருத்து வேறுபாடு இருந்தால், அதை பேசி தீர்க்க முடியும்.
சமூக வலைத்தளத்தில் பிரதமரையும், கூட்டணி கட்சி தலைவர்களையும் விமர்சனம் செய்வதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் வரம்பு மீறாமல் நடந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பீஹாரில் உள்ள பா.ஜ.,வின் 76 லட்சம் தொண்டர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், தங்கள் கோரிக்கையிலிருந்து பின்வாங்கப் போவது இல்லை என, ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இதனால், பீஹாரில் ஆளும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் மோதல் நிலவுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE