வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி ;'இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனா காலத்திலும் அவர்களுக்கு லாபம் கொட்டியுள்ளது' என, 'ஆக்ஸ்பாம் இந்தியா' அமைப்பு வெளியிட்டு உள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'ஆன்லைன்'
உலக பொருளாதார அமைப்பின் மாநாடு ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் டாவோசில் நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த முறை 'ஆன்லைன்' முறையில் நடக்கிறது. இதில் இந்தியாவில் உள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் குறித்த அறிக்கையை ஆக்ஸ்பாம் இந்தியா அமைப்பு
வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 39 சதவீதம் உயர்ந்து 142 ஆக அதிகரித்துள்ளது. பெரும் கோடீஸ்வரர்கள் 142 பேர் உள்ளனர்.இதில் முதல் 10 பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்துகளை வைத்து, இந்தியாவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பள்ளி மற்றும் உயர்நிலை கல்வி வசதியை அளிக்க முடியும்.கொரோனா காலத்திலும் இந்த பெரும் கோடீஸ்வரர்கள் வருவாய் இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது.
பெரும் பணக்காரர்களில் 10 சதவீதம் பேருக்கு மட்டும், 1 சதவீத கூடுதல் வரி விதித்தால் 17.7 லட்சம் கூடுதல் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்கும். முதல் 98 பணக்காரர்களுக்கு இதுபோல் 1 சதவீத கூடுதல்வரி விதித்தால் ஆயுஷ்மான் பாரத் எனப்படும் மருத்துவ சுகாதார திட்டத்தை அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு செயல்படுத்த முடியும்.இந்தியாவில் உள்ள 142 பெரும் பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு 53 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. சொத்து பட்டியலில் நாடு முழுதும் உள்ள மக்களில் கடைசியில் உள்ள 40 சதவீதம் பேர், அதாவது 55.5 கோடி பேரிடம் உள்ள சொத்துக்கு இணையான சொத்துக்கள், பட்டியலில் முதலில் உள்ள 98 பேரிடம் உள்ளன.
50 சதவீதம்
முதல் 10 கோடீஸ்வரர்கள், தலா ஒரு நாளைக்கு 7.42 கோடி ரூபாய் செலவழித்தாலும், அவர்களது தற்போதைய மொத்த சொத்தையும் பயன்படுத்த 84 ஆண்டுகளாகும்.கொரோனா வைரஸ் காலத்தில் சுகாதார பிரச்னையுடன், பொருளாதார பிரச்னையும் இந்தியாவில் உருவாக்கியுள்ளது. கோடீஸ்வரர்களில் 10 சதவீதம் பேரின் சொத்து மதிப்பு 45 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் மக்கள் தொகையில் கடைசி நிலையில் உள்ள, 50 சதவீதம் பேரின் சொத்து மதிப்பு, 6 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
சுகாதாரம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு துறைகளில் உள்ள ஏற்றத் தாழ்வு நிலையே, இந்தியாவில், பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையே மிகுந்த இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.சுகாதாரம், கல்வி போன்றவற்றில், தனியார் பங்களிப்பை குறைத்து அரசின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். மேலும், பெரும் கோடீஸ்வரர்கள், மேலும் மேலும் வருவாய் சேர்வதை குறைக்கும் வகையில், கூடுதலாக வரியை விதிக்கலாம்.
அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயே, மக்களுக்கு சுகாதாரம், கல்வி வழங்க போதுமானதாக இருக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE