சென்னை : ''கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டால், தொற்று ஏற்பட்டாலும் இறப்பை தடுக்கலாம்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கிண்டியில் டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் சுப்பிரமணியன் மரியாதை செலுத்தினார். பரிசோதனைபின், அமைச்சர் அளித்த பேட்டி:எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழா, தமிழக அரசின் சார்பில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
கடந்த 1962ல் மேல்சபை உறுப்பினராகவும், 1967ல் சட்டசபை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.மேலும், தி.மு.க., பொருளாளராகவும், முதல்வராகவும் திறம்பட பணியாற்றி உள்ளார்.தமிழகத்தில் உயர்ந்து கொண்டே இருந்த கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. பொங்கல் விடுமுறைக்கு பின், எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனை செய்யும் போது தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் தினமும் 1.5 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன. தொற்றால் பாதிக்கப்படுவோரை மருத்துவமனைகளில் அனுமதிப்பது குறைவாக உள்ளது. மாநிலம் முழுதும் 1.91 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் இருந்தாலும், 8,900 படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன. ஆக்சிஜன் வசதி, படுக்கைகள், மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் உள்ளன. மருத்துவ கட்டமைப்பும் தயார் நிலையில் உள்ளது.
தடுப்பூசி போடாதவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். 60 வயது கடந்த 90 லட்சம் பேர், இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடாமல் உள்ளனர். தடுப்பூசி மட்டுமே நம்மை பாதுகாக்கும் என்பதால், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். 76 சதவீதம்வரும் சனிக்கிழமை, 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும். 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களில், 76 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் படிக்கும் மாணவர் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இதைதொடர்ந்து, தாம்பரம் சானடோரியம், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில், 100 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டி: சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட, 14 மாவட்டங்களில், 1,436 படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்ட நபரால், ஒன்பது பேர் வரை உடனடியாக பாதிக்கப்படுகின்றனர்.
மாநிலத்தில், 88.63 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 64.45 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். மொத்தம் 9.10 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE