எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்தில் உள்ள அவரது நாற்காலியில் அமர்ந்து, தன் ஆதரவாளர்களுடன் 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார், சசிகலா.
105வது பிறந்த நாள்
அ.தி.மு.க., நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாள் விழாவை, சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்தில், நேற்று சசிகலா ஆதரவாளர்கள் தனி அணியாக கொண்டாடினர். விழாவில் பங்கேற்க சசிகலா வந்தபோது மழை பெய்தது. மழையில் நனைந்தபடி இல்லத்திற்கு வந்தார். அங்கு நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.
பின், எம்.ஜி.ஆர்., அறைக்கு, சசிகலாவை அவரது ஆதரவாளர்கள் நீலாங்கரை முனுசாமி, தி.நகர் வைத்தியநாதன், எம்.ஜி.ஆரின் பேரன் குமார் ராஜேந்திரன் ஆகியோர் அழைத்து சென்றனர். எம்.ஜி.ஆர்., அமர்ந்த நாற்காலியில் சசிகலாவை அமரும்படி தெரிவித்தனர். அதற்கு சசிகலா, ''தலைவர் அமர்ந்த நாற்காலியில் நான் உட்கார விரும்பவில்லை. வேறு நாற்காலி கொண்டு வாருங்கள்,'' என்றார்.

மீண்டும் அ.தி.மு.க.,
ஆனால், ஆதரவாளர்கள் வலியுறுத்திய பின், எம்.ஜி.ஆரின் நாற்காலியில் சசிகலா அமர்ந்தார். அவருக்கு எதிராக முன்னாள் கொறடா பள்ளிப்பட்டு நரசிம்மன் அமர்ந்தார். முன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் மாவட்ட செயலர்கள் வேலுார் வாசு, காட்டுப்பாக்கம் ஜீவானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகளிடம், சசிகலா அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, 30 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார்.
அப்போது சசிகலா, ''வரும் 21ம் தேதிக்கு பின் நல்ல செய்தி வரும். தென் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டிருந்தேன். ''கொரோனா பரவல் ரத்து செய்ய வைத்து விட்டது. அனைவரும் ஒருங்கிணையும் நேரம் வந்து விட்டது; மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி மலரும்,'' என்றார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE