சிவகங்கை : மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வில் பங்கேற்காத முதுநிலை ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மணிவாசகன், தென்மண்டல செயலாளர் சற்குணராஜ் கூறியதாவது: மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடக்கும். கொரோனாவால் 2020, 2021ல் கலந்தாய்வு நடக்கவில்லை. கலந்தாய்வு நடக்காததால் தகுதியுடைய ஆசிரியர்களுக்கு பதவி, ஊதிய உயர்வு கிடைக்க வில்லை.இந்தாண்டு அரசு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவித்துள்ளது. கலந்தாய்வுக்கு ஜன., 2022ன் படி பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. 2019க்கு முன் நடந்த கலந்தாய்வில் தற்காலிக உரிமை விடல் செய்த ஆசிரியர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காதவர்களை விட 2019க்கு முன் உள்ளவர்கள் மூத்த ஆசிரியர்களாக வருவதால் பதவி உயர்வு கிடைப்பதில் முன்னுரிமை பெறுவர்.2019 க்கு முன் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு இரு துறை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று விதி இருந்தது. 2020ல் கூடுதலாக இரு தேர்வுகள் எழுதியிருக்க வேண்டும் என அரசு அரசாணை வெளியிட்டது. முதன்மை கல்வி அலுவலகம் மூலம் புதிய இரு துறைத் தேர்வு அறிவிக்காததால் பலர் இத்தேர்வை எழுதவில்லை. பதவி உயர்வு விதிமுறைகள் குறித்து 2021 டிச.,20ல் பள்ளி கல்வித்துறை அறிவித்து 2022 ஜன.,1ன் படி பதவி உயர்வு பட்டியல் அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.புதிய விதிகளின் படி பல மூத்த ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் உள்ளது. விதிகளில் தளர்வு ஏற்படுத்தி, மூத்த ஆசிரியர்களுக்கு கூடுதல் தேர்வில் தேர்ச்சி பெற கால அவகாசம் வழங்க வேண்டும். முதுநிலை ஆசிரியர்களை பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் சேர்க்க பள்ளி கல்வித் துறை ஆணையருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE