வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பால், 'கேம்பஸ்' வேலைவாய்ப்பு பெற்ற இன்ஜினியரிங் மாணவர்கள், வேலையில் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜனவரி 20 முதல் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்கள், செமஸ்டர் தேர்வு தள்ளிவைப்பால் கவலை அடைந்துள்ளனர்.
அண்ணா பல்கலையின் சென்னை வளாகத்தில் மட்டும், பல்வேறு தனியார் பெரு நிறுவன பணிகளுக்கு, கேம்பஸ் இன்டர்வியூ எனப்படும், வளாக நேர்காணல் வாயிலாக, இறுதி ஆண்டு படிக்கும் 1,700 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு உத்தரவு
கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கணினி தொடர்பான நிறுவனங்கள், அதிக அளவில் மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்துள்ளன.ஆனால், 2021 டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வுகளே இன்னும் நடக்கவில்லை. இதன்பின், நான்காம் ஆண்டு அல்லது இன்ஜினியரிங்கில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, இறுதி செமஸ்டர் தேர்வு ஏப்ரலில் நடத்தப்பட வேண்டும்.
அப்போது தான், விடைத்தாள்கள் திருத்தப்பட்டு ஜூன், ஜூலையில் மாணவர்கள் பட்டம் பெற முடியும். அதன்பின், அவர்கள் தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்துக்கு பணிக்கு செல்ல வேண்டும்.வேலைக்கு தேர்வு செய்யும் நிறுவனங்கள், தங்களின் வேலைவாய்ப்பு உத்தரவை வழங்கும் போதே, ஆகஸ்டுக்குள் பட்டம் பெற்று, வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்ற, உத்தரவாதம் கேட்கும்.
மாணவர்கள் அச்சம்
தற்போதைய சூழலில், இந்த காலக்கெடுவுக்குள் இறுதி செமஸ்டர் தேர்வை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சரியான காலத்தில் பணிகளில் சேர முடியுமா அல்லது வாய்ப்பு பறிபோகுமா என மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, இறுதி ஆண்டு மாணவர்களுக்காவது, டிசம்பர் தேர்வை விரைந்து முடித்து, அவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுக்கான வகுப்புகளை துவங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE