சென்னை : 'குடியரசு தின அணிவகுப்பில், தமிழக அரசின் ஊர்தி இடம் பெறுவதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அவரது கடிதம் விபரம்:
குடியரசு தின அணிவகுப்பில், தமிழக ஊர்தி பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளதை அறிந்து, மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன். இதற்காக, தமிழகத்தின் புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையில், 'சுதந்திர போராட்டத்தில் தமிழ்நாடு' என்ற கருப்பொருளை தேர்ந்தெடுத்து, தமிழக அரசு சமர்ப்பித்து இருந்தது.
ஊர்தியில் தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்களான, வ.உ.சிதம்பரனார், பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்களின் ஓவியங்கள் இடம்பெற இருந்தன. இதற்காக, மாநிலத்தின் பிரதிநிதிகள் மூன்று முறை நிபுணர் குழு முன் ஆஜராகினர்; நான்காவது முறை, அவர்களை அழைக்கவில்லை.
தமிழகத்தின் ஊர்தியை ஒதுக்குவது, தமிழக மக்களின் உணர்வுகளையும், தேசபக்தி உணர்வுகளையும் ஆழமாக புண்படுத்தும். தமிழகத்தின் ஊர்தியை நிராகரித்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது, தமிழக மக்களுக்கும், மிகுந்த கவலை அளிக்கிறது. எனவே, தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்களை காட்சிப்படுத்தும், தமிழக ஊர்தியை சேர்க்க வேண்டும். இப்பிரச்னையில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும். விடுதலை போராட்ட வரலாற்றில், தமிழகத்தின் பங்களிப்பு இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வெள்ள நிவாரண நிதி கொடுங்க!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தில், 2021ம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் போது, வரலாறு காணாத மழை பெய்தது. இதனால், சென்னை மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், வெள்ள சேதம் ஏற்பட்டது. வெள்ள நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிக்காக, மத்திய அரசிடம் 6,230 கோடி ரூபாய் நிவாரணம் கேட்கப்பட்டது. இதற்காக, மூன்று முறை தமிழக அரசு சார்பில், மத்திய அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
இதற்கிடையே, கொரோனா மூன்றாவது அலை பரவலும் துவங்கி விட்டது. தொற்றை எதிர்த்து போராடுவதற்கான முயற்சிகளை, மாநில அரசு முழுமையாக செய்து வருகிறது. இதற்கு பெரும் நிதி தேவைப்படுகிறது. மாநில நிதி நிலைமையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஊரடங்கு விதிமுறைகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை மேலும் கூட்டுவதாக அமைந்துள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பயிர் சேதம் அடைந்த விவசாயிகளுக்கும், மாநில அரசு நிதியில் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. எனவே, வெள்ள சேத சீரமைப்பு பணிகளுக்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும். இது, மாநில மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். தமிழகத்திற்கு நிதியுதவி கிடைக்க தாங்கள் உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE