வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க வந்த அமைச்சர்களை வரவேற்க, தி.மு.க.,வினரால் பல கி.மீ., துாரத்திற்கு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இது, பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வன்னியன் விடுதியில் உள்ள திடலில், 62-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுசூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் போட்டியை துவக்கி வைத்தனர்.
ஒழிப்போம்
அமைச்சர்கள் வருகையையொட்டி, அவர்களை வரவேற்கும் விதமாக, புதுக்கோட்டையில் இருந்து வன்னியன்விடுதி வரை, பல கி.மீ., துாரத்திற்கு, நுாற்றுக்கணக்கான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. தி.மு.க.,வினரின் இந்த அத்துமீறல் போக்கு, பொதுமக்களை முகம் சுழிக்க வைத்தது.
நீதிமன்ற உத்தரவை பின்பற்றும் வகையில், 'பேனர் கலாசாரத்தை ஒழிப்போம்' என தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கூறி வருகிறார். இந்த நிலையில், தி.மு.க.,வினரின் இந்த செயல், 'வேலியே பயிரை மேய்வது போல' அமைந்து விட்டதாக, பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கிடையே, நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 665 காளைகள், ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டில், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகள் முட்டியதில் 66 பேர் காயம் அடைந்தனர்.
பரிசுகள் வழங்கல்
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை முன்னிட்டு, ஆலங்குடியில் உள்ள எட்டு டாஸ்மாக் கடைகளும், பகல் 12:00 முதல் மாலை 6:00 மணி வரை மூடப்பட்டன.

ஏற்பாட்டில் குளறுபடி
ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவ குழுவினருக்கு, தேனீர், உணவுக்கான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. காலை முதல் மதியம் வரை பட்டினி கிடந்ததால், மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும், உணவு அருந்துவதற்காக வெளியே சென்றனர். இதனால், அந்த நேரத்தில் காயமுற்ற வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளில் நடந்த குளறுபடியே இதற்கு காரணம் என்று வீரர்கள் குற்றஞ்சாட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE