வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: கோவையில், கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 'டோலோ' மாத்திரை விற்பனை எக்குத்தப்பாய் உயர்ந்துள்ளது.
சர்வதேச அளவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் நம் நாட்டையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா தினசரி பாதிப்பு இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக பரவி வருகிறது.
அதேபோல், உருமாறிய கொரோனா வைரஸான 'ஓமைக்ரான்' தொற்றும் அதிகரித்து வருகிறது. ஓமைக்ரான தொற்று அதிகரித்து வந்தாலும், அதன் பாதிப்பு 'டெல்டா' போன்று பெரியளவில் இருக்காது என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால், 'டோலோ 650' மாத்திரை அதிக அளவில் விற்பனையாகி வருகிறது. அதிகம் விற்பனையாகும் மாத்திரையில் முதல் இடத்தில் 'டோலோ' உள்ளது.
கொரோனா முதல் அலையின்போது, 'பாராசிட்டமால்' மாத்திரைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மருந்து கடைகளில் டாக்டர் பரிந்துரை இல்லாமல் மாத்திரை கொடுக்கக்கூடாது என்ற உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டது. அதேசமயம் பாராசிட்டமால் மாத்திரையும் விற்றுத்தீர்ந்தது.
தட்டுப்பாடு ஏற்பட்டதும், பாராசிட்டமால் வாங்கினால், வாங்குபவரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, கொரோனா 'டெஸ்ட்' எடுக்க அறிவுறுத்தப்பட்டது.தற்போது கொரோனா மூன்றாவது அலையில், 'டோலோ' மாத்திரை அதிகமாக விற்கிறது. சாதாரண காய்ச்சல், தலைவலி, உடல்வலி உள்ளிட்டவற்றுக்கு 'டோலோ' தீர்வாக இருப்பதாக, டாக்டர்கள் பரிந்துரைக்க, கோவையிலுள்ள மருந்து கடைகளில் இம்மாத்திரை அதிகம் விற்பனையாகி வருகிறது.
சுகாதார ஆய்வு நிறுவன தரவுகளின்படி, 'டோலோ' மற்றும் 'கால்பால்' ஆகியவை காய்ச்சலுக்காக சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளாகும். டாக்டர்களால் பரவலாக பரிந்துரைக்கப்படுகின்றன. சாதாரண காய்ச்சல் மற்றும் அதுதொடர்பான பாதிப்புகளுக்கான மருந்தாகி விட்டதே 'டோலோ' விற்பனைக்கு அதிக காரணம்.
மருந்து கட்டுப்பாட்டு துறை கோவை மண்டல உதவி இயக்குனர் குருபாரதி கூறுகையில், ''மருந்துச்சீட்டு இல்லாமல் காய்ச்சலுக்கான பாராசிட்டமால், டோலோ போன்ற மாத்திரைகளை விற்கக்கூடாது என, மருந்து விற்பனையகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவை மீறி மருந்துச்சீட்டு இன்றி மாத்திரை வழங்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE