வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுச்சேரி: கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதற்கு கவர்னரும், முதல்வரும் பொறுப்பு ஏற்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் ஆங்கிலப் புத்தாண்டு விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பங்கேற்றனர். ஐகோர்ட் தீர்ப்பினை மதிக்காமல் இருந்ததன் விளைவு, தற்போது மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. பூஸ்டர் தடுப்பூசி போட்டிருந்தும் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கேளிக்கை, விளையாட்டுகள் என்று அனைத்து இடங்களையும் திறந்து விட்டதால், கொரோனா பரவலில் புதுச்சேரி முதல் இடத்தில் உள்ளது. இது, வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயம்.
பெரிய மாநிலமான மகாராஷ்டிராவில் தொற்று பரவல் 40 சதவீதத்தை தாண்டவில்லை. டில்லி-26; தமிழகம்-24; கர்நாடகம்-32 சதவீதம் தொற்று பரவல் உள்ளது.சிறிய மாநிலமான புதுச்சேரியில் தொற்று பரவல் 57.44 சதவீதமாக உள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது.
மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பிற்கு கவர்னர், முதல்வர் பொறுப்பேற்க வேண்டும்.சிறந்த மருத்துவ கட்டமைப்பு இருந்தும் புதுச்சேரியில் கொரோனா அதிகரித்து வருகிறது. தலைமை செயலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
எதில் முதலிடத்தில் இருக்க கூடாதோ,அதில் எல்லாம் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது. நிர்வாகம் சீர்கேட்டுள்ளதற்கு இது மிகப்பெரிய உதாரணம்.அண்டை மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. ஆனால் இங்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தடுப்பூசி போட பள்ளிக்கு மாணவர்கள் வர வேண்டும் என்கின்றனர். வீட்டிற்கு சென்று மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் என்ன பிரச்னை.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE