வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்: ஆம்ஆத்மி கட்சி சார்பில் பஞ்சாப் சட்டசபை பொதுத்தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக பகவந்த் மன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநில சட்டசபைக்கான தேர்தல் வரும் பிப்.,20ம் தேதி ஒரேகட்டமாக நடக்கிறது. இதில் ஆம்ஆத்மியும் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. இதனையடுத்து பிரசாரத்தை துவக்கிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்துள்ளார்.

இதற்கிடையே, ஆம்ஆத்மி சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது. இதற்காக பகவந்த் மன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க விரும்புவதாகவும், ஆனால், மக்களே பஞ்சாப் முதல்வர் முகத்தை தேர்வு செய்யலாம் எனவும் கெஜ்ரிவால் கூறினார். இதற்காக இலவச தொடர்பு எண்ணில் குறிப்பிட்ட நாட்களுக்குள் மக்கள் பதிவு செய்யலாம் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று (ஜன.,18) நடைபெற்ற நிகழ்ச்சியில், பகவந்த் மன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்தார் கெஜ்ரிவால்.

அவர் மேலும் கூறியதாவது: பஞ்சாப் முதல்வர் முகத்தை தேர்வு செய்வது தொடர்பாக 21 லட்சம் பேர் மொபைல் போன் மூலம் பதிவு செய்திருந்தனர். அதில், 93.3 சதவீதம் பேர் பகவந்த் மன்னை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தை பெருமை அடைய செய்யக்கூடியவராக பகவந்த் மன் இருப்பார். இவ்வாறு அவர் கூறினார். பகவந்த் மன் தற்போது பஞ்சாப் மாநிலத்தின் சங்குரூர் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE