மதுரை: தைப்பூச திருவிழா, இன்று(18 ம்தேதி) திருப்பரங்குன்றம், திருத்தணி, வடபழனி, மருதமலை உள்ளிட்ட முருகன் கோவில்களில் கோலாகலமாக நடந்தது.
மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடந்தது. முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், கடந்த, 12ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச திருவிழா துவங்கியது. தைப்பூசத்தை ஒட்டி அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 16 வகையான மங்கல திரவியங்கள் கொண்டு மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, ரத்தின அலங்காரத்தில் காட்சியளித்தார்.

திருத்தணி முருகன் கோவிலில், தைப்பூசத்தை முன்னிட்டு, மூலவருக்கு, சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடந்தன. சென்னை வடபழனி, முருகன் கோவிலில், காலை முருகப்பெருமானுக்கு, பால், பழம், பன்னீர், இளநீர் அபிஷேகங்கள் நடந்தன. தொடர்ந்து, தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பொதட்டூர்பேட்டை கறுப்பு மலையடிவாரத்தில், காலை வள்ளலார் சத்திய ஞான சபை திறப்பு விழா நடந்தது.

பழநி முருகன் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர் திங்கள் செவ்வாய் ஆகிய நாட்களில் கோயில் மூடப்பட்டிருந்த போதிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் அடிவார பகுதியில் காவடியாட்டம் மயிலாட்டம் கரகாட்டம் அலகு குத்தி சென்றனர்.
ஊட்டி ஹெல்க்ஹில் முருகன் கோவிலில் தைபூச விழா கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதியின்றி எளிமையாக நடந்தது. காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜையுடன், முருக முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கோயிலுக்கு பக்தர்கள் அனுமதி இல்லாததால் நுழைவாயிலில் நின்று தரிசனம் செய்து பிரசாதம் வாங்கி சென்றனர். அதேபோல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச விழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது.
மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பாலாபிஷேகம் நடந்தது.
முருகப்பெருமானின் அறு படை வீடுகளுள் 4-வது படைவீடாக, தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாத கோவில் திகழ்கிறது. இக்கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 9ம் தேதி கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மங்களவாத்தியம் முழங்க விழா கொடியேற்றப்பட்டது. அப்போது உற்சவர் சுப்பிரமணியசுவாமி வள்ளி- தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
தொடர்ந்து, விக்னேஸ்வரர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சகிதமாக உற்சவ மண்டபம் எழுந்தருளின்ர். அன்றிரவு படிச்சட்டத்தில் வீதியுலா நடைபெற்றது. இதையடுத்து தினமும் காலை, மாலை நேரங்களில் படிச்சட்டத்தில் சுவாமி உள்பிரகார புறப்பாடு நடக்கிறது. விழாவின் சிறப்பம்சமாக 13ம் தேதி இரவு பஞ்சமூர்த்திசுவாமிகள் வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நாளான இன்று தைப்பூசத்தை முன்னிட்டு காலை நாலு முப்பது மணிக்கு மூலவரான சுவாமி சுவாமி நாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வைரவேல் சாத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .இன்று மாலை கோவில் உள்பிரகாரத்தில் உள்ள வஜ்ர தீர்த்தத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரியும் அதனைத் தொடர்ந்து இரவு கொடி இறக்கமும் செய்யப்பட உள்ளது.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான பழனி ஆண்டவர் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகங்கள், பூஜைகள் முடிந்து ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
மலைக்குப் போகும் பாதையில் மலை அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள பழனியாண்டவருக்கு தைப்பூசத்தன்று விழா நடைபெறுவது வழக்கம். காலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து பூஜை, அபிஷேக பொருட்களை சிவாச்சாரியார்கள் பழனி ஆண்டவர் கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். அங்கு எழுந்தருளியுள்ள மூலவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உட்பட பல்வகை திரவிய அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள உற்சவர்கள் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை, முத்துக்குமார சுவாமி தெய்வானை தனித்தனியாக கோவிலுக்குள் புறப்பாடாகினர்.

பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் வழக்கமாக தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோயில் திறக்கப்படவில்லை. 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்ற சொல்லாடலுக்கு ஏற்ப,பக்தர்கள் சமூக இடைவெளியுடன் ராஜ கோபுரத்தை தரிசனம் செய்தனர். கோயில் அருகே வராக நதி ஐஸ்வர்ய விநாயகரை வணங்கி விட்டு சென்றனர்.
பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவசுப்பிரமணியன், வள்ளி,தெய்வானைக்கும், அருகே பால முத்துக்குமார தண்டபாணி சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
தைப்பூசத் திருவிழாவில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. கோவிலில் நுழைவாயிலில் சாமி தரிசனம் செய்து பக்தர்கள் திரும்பினர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வலியபாடம் அருகே உள்ளது சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு எல்லா ஆண்டும் தைப்பூச மகோற்சவம் கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டு உற்சவம் கடந்த 10ம் தேதி கோவில் தந்திரி வாசுதேவா வாத்தியான் நம்பூதிரிபாடின் தலைமையில் நடந்த கொடியேற்றத்துடன் ஆரம்பித்தன. திருவிழாவின் சிறப்பு நாளான இன்று காலை நான்கு மணிக்கு கணபதி ஹோமத்துடன் கோவில் நடை திறந்தன. தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், நவகம், பஞ்சகவ்யம் ஆகிய அபிஷேகங்கள் மூலவருக்கு நடைபெற்றது. இதையடுத்து
நாணயப்பறை, காழ்ச்சப்பறை சமர்ப்பணம் நடந்தது. 7 மணிக்கு உஷ பூஜைக்கு பிறகு காவடி எழுந்தருளல், காவடி பூஜை, அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து பஞ்சவாத்தியம் உறங்கு உண்டு யானைகளின் அணிவகுப்பிற்க்கு பிறகு உச்ச பூஜை நடந்தன. மாலை 6.00 மணிக்கு மூலவருக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யானைகளின் அணிவகுப்புடன் பஞ்சவாத்தியம் முழங்க மூலவர் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளும் வைபவவும் 8 மணிக்கு அத்தாழ பூஜையும் நடந்தன. இதையடுத்து நடந்த யானைகளின் அணிவகுப்புடன் விழா நிறைவடைந்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE