பிரதமர் என்பவர் தேசத்தின் சொத்து!
வழக்கறிஞர் அ.குணசேகரன், புவனகிரி-,கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் பிரதமர்கள் இருவரின் படுகொலைகள் இன்று வரை மிகப்பெரிய வடுவாக, நம் அடி மனதில் ஆழமாக பதிவாகியுள்ளது.சீக்கியரின் பொற்கோவிலுக்குள், பிரிவினை வாதிகள் முகாமிட்டிருந்தனர். நம் நாட்டின் முதல் பெண் பிரதமரும், 'இரும்பு பெண்மணி'யாக கருதப்பட்டவருமான இந்திரா, அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்.பொற்கோவில் மீது தாக்குதல் நடத்தினார் என்பதற்காக, தன் பாதுகாப்பு படை வீரர்களாக இருந்த சீக்கியர்களால், இந்திரா படுகொலை செய்யப்பட்டார்.அதே போல, இலங்கைக்கு அமைதிப்படை அனுப்பிய பிரதமர் ராஜிவ் மீது, விடுதலை புலிகள் அமைப்பு கோபம் கொண்டது. நம் நாட்டிற்குள் புகுந்த விடுதலை புலிகள் அமைப்பினர், தற்கொலை படை தாக்குதல் நடத்தி, முன்னாள் பிரதமர் ராஜிவை படுகொலை செய்தனர்.இந்த இரண்டு படுகொலைகளும், நம் நாட்டின் பாதுகாப்பை கேள்விகுறி ஆக்கியது. பின், அவ்வப்போது எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல், நம் நாட்டில் சில தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
இதற்கு, நம் அண்டை நாடான பாகிஸ்தான் தான் காரணம் என்பது, உலகமே அறிந்தது.கடந்த, 2014ல் பிரதமர் பதவியில் மோடி அமர்ந்தார். அதன் பின் எல்லையில் பாகிஸ்தான் மற்றும் சீனா இரண்டையும் துணிச்சலாக, இந்திய படை எதிர்கொண்டது.லடாக்கில், சீனாவுக்கு பதிலடி கொடுத்தார்; 'சர்ஜிகல் ஸ்டிரைக்' தாக்குதல் வாயிலாக பாகிஸ்தானுக்கும் பாடம் புகட்டினார், நம் பிரதமர் மோடி. இவை வாயிலாக, நம் ராணுவ வலிமையை உலக நாடுகளுக்கு உணர்த்தினார்.இதனால் இந்த இரண்டு எதிரி நாடுகளும், இங்குள்ள பிரதமர் மோடிக்கு எதிராக அரசியல் செய்யும் கட்சிகளை துாண்டி விடுகின்றன.இன்று உலகளவில் மிகவும் சக்தி வாய்ந்த பிரதமர்களில் ஒருவராக, மோடி திகழ்கிறார். அப்படிப்பட்ட பிரதமருக்கு, உள்நாட்டிலேயே பாதுகாப்பு கொடுக்க தவறிய காங்., தலைமையிலான பஞ்சாப் அரசு நிச்சயம் குற்றவாளி தான் அல்லவா?
பிரதமர் மோடியின் மீதுள்ள தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக, அவரின் பாதுகாப்பு விஷயத்தில், காங்., அரசு அலட்சியம் காட்டியுள்ளது.ஏற்கனவே முன்னாள் பிரதமர்கள் இருவரை, பறிகொடுத்து விட்டோம். மீண்டும் அப்படி ஒரு துன்பியல் நிகழ்வு, எப்போதும் நம் நாட்டில் நிகழக் கூடாது.
பிரதமரின் பாதுகாப்பு என்பது, தனிநபர் சார்ந்தது அல்ல; அது தேசத்தின் நலன் சார்ந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தி.மு.க., ஆட்சி நடக்கும் வரை...
என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே அராஜகம், ரவுடித்தனம் அதிகரித்துவிடும் என்பது, ஊரறிந்த ரகசியம்.மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், தி.மு.க.,வினர் அராஜகத்தில் இறங்கி விட்டனர்.செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், முருங்கை கிராம ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில், 2ம் தேதி மீன் பண்ணை குட்டை அமைக்கும் பணி நடந்தது. '100 நாள்' திட்டத்தில் தொழிலாளர்கள் செய்ய வேண்டிய பணியை, இயந்திரம் வாயிலாக மேற்கொண்டு உள்ளனர்.
இது குறித்து, நம் நாளிதழின் அச்சிறுப்பாக்கம் நிருபர் மோகன், செய்தி சேகரித்துள்ளார்.இதையறிந்த, தி.மு.க.,வைச் சேர்ந்த முருங்கை ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரியின் மாமனார் ராமானுஜம் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்டோர், நிருபர்மோகனின் வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர்.'செய்தி வெளியிட்டால்,கொலை செய்து விடுவோம்... நடப்பது, தி.மு.க., ஆட்சி' என, மோகனையும், அவரது குடும்பத்தையும் மிரட்டிஉள்ளனர்.மீன் குட்டையை, '100 நாள்' வேலைத் திட்டத்தின்படி, தொழிலாளர்களை பயன்படுத்தி தான் அமைக்க வேண்டும்; மாறாக, இயந்திரம் வாயிலாக பணி செய்து, மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.கொலை மிரட்டல் விடுத்த, தி.மு.க.,
பிரமுகர் குடும்பத்தினர்மீது போலீசார் நடவடிக்கை எடுக்க பயப்படுகின்றனராம்.தி.மு.க., ஆட்சியில், ரவுடிகளுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்க முடியுமா... அவ்வளவு தைரியம் தான் அவர்களுக்கு இருக்கிறதா?நிருபர் மோகனின் குடும்பம், உயிர் பயத்தில்உள்ளது. இன்று அவர் குடும்பத்திற்கு நேர்ந்தது,நாளை நமக்கும் நடக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.ஒரு குடும்பத்தையே கொலை செய்யும் அளவிற்கு, தி.மு.க.,வினர் அராஜகத்தில் இறங்கியும், பா.ஜ., தவிர, வேறு எந்த கட்சியும் அதை கண்டு கொள்ளவில்லை.'பத்திரிகை நிருபர்களை, முன்களப்பணியாளர்' என்று பாராட்டினார், முதல்வர் ஸ்டாலின். ஆனால் அவரின், 'உடன்பிறப்புகள்'
அந்த முன்களப்பணியாளரின் முதுகெலும்பு நொறுங்கும் வண்ணம் செயல்படுகின்றனர்.தி.மு.க., ஆட்சி நடக்கும் வரை, பொதுமக்கள் உயிரை கையில் பிடித்தபடியே தான் மூச்சு விட முடியும்.
அவர் இந்நாட்டின் பிரதமர்!
ந.தேவதாஸ், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்தை நீக்க கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது, கேரளா உயர் நீதிமன்றம்.தீர்ப்பின் போது நீதிபதி பி.வி.குன்கி கிருஷ்ணன், 'மோடி, நம் நாட்டின் பிரதமர். மக்கள், அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். பிரதமரை, அரசியல் கட்சிக்காரர் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. உங்கள் பிரதமரை பற்றி, நீங்கள் ஏன் வெட்கப்பட வேண்டும்?' என, மனுதாரரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி, துாய்மையான தலைவர். அவரது ஆட்சியில் இதுவரை பெரிதாக லஞ்சம், ஊழல் என்ற பேச்சே அடிபடவில்லை.உலக நாடுகளுடன் நல்லுறவை பேணி, நாட்டை பாதுகாத்து வருகிறார். உலகின் முக்கிய தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார்.மோடி என்ற தனிமனிதருக்கு எதிராக, அவர் மனு தொடுக்கவில்லை; இந்நாட்டின் பிரதமர் பதவியின் மாண்பை கேள்விக்குறியாக்கி இருக்கிறார்.
அவருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதத்தோடு கூடவே, குறைந்தபட்ச சிறை தண்டனையும் வழங்கியிருக்க வேண்டும்.அது தான், நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிக்கும் மற்ற வீணர்களுக்கும் ஒரு பாடமாக அமையும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE